இன்று தமிழர்களுக்கான உரிமைகள் விலை பேசுப்படுகின்றன..! இரா.துரைரட்னம் விசனம்
வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் தியாகம் செய்த சமூகம், உரிமை கேட்டுப் போராடிய சமூகம், விலைமதிக்க முடியாத உயிர்களைத் தியாகம் செய்த சமூகம், இன்று தேசியக் கட்சிகளின் அலுவலகங்களாக மாறுகின்ற நிலைமையேற்பட்டுள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்னம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(20.06.2026) மட்டக்களப்பு - வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் அனுஸ்டிக்கப்பட்ட தியாகிகள் தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களுக்கான உரிமைகள்
இந்த நிகழ்வானது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரட்னம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில், ரெலோவின் முக்கிஸ்தரும் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார், சிரேஸ்ட விரிவுரையாளர் ரவிச்சந்திரா, ஈபி ஆர் எல் எப் இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் இயக்கத்தின் உயிர்நீர்த்தவர்களின் உறவுகள் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது, பொதுச்சுடர் மற்றும் ஈகச்சுடர் ஏற்றப்பட்டுள்ளதுடன், உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

நிகழ்வில் கலந்து கொண்டு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில்,
இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி பலதரப்பட்ட இயக்கங்கள் உருவாகி, அந்தப் போராட்டம் இறுதிப் கட்டத்தில் மௌனிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழர்களுக்கான உரிமைகள் விலை பேசுகின்ற அளவுக்கு மாற்றமடைந்திருக்கின்றன.
தேசியக் கட்சிகளின் அலுவலகங்களாக மாறிய சமூகம்
வடக்குக் கிழக்கில் ஒரு தேசியக் கட்சி ஆட்சி அமைக்கக்கூடியவாறும் ஆளுமை செலுத்தக்கூடியவாறும் நிலைமைகள் மாற்றமடைந்திருக்கின்றன.
மேலும், வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரையில் தியாகம் செய்த சமூகம், ஒரு உரிமையைக் கேட்டுப் போராடிய சமூகம், விலைமதிக்க முடியாத உயிர்களைத் தியாகம் செய்த சமூகம், இன்று தேசியக் கட்சிகளின் அலுவலகங்களாக மாறுகின்ற நிலைமையில் சில கட்சிகள் தங்களின் செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

வடக்கு கிழக்கில் இன்றுள்ள சூழ்நிலையைப் பொறுத்தவரையில் தேசியக் கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சியினர் இலங்கையில் பெரும்பான்மை பெற்றிருந்தாலும் கூட, வடக்குக் கிழக்கில் இனப்பிரச்சினை தொடர்பில் சம்பந்தப்பட்ட விடயத்தில், ஒரு அங்குலத்தைக் கூட நகர்த்த முடியாது என்ற மிகவும் தெளிவான சிந்தனையில் இப்பொழுதிருக்கின்ற ஆளுங்கட்சி தனது செயல் வடிவங்களைக் கொண்டிருக்கின்றது.
தேசிய மக்கள் கட்சியைப் பொறுத்தவரையில், "தமிழர்களின் உரிமைகளை நாங்கள் பாதுகாக்கின்றோம்" என்று கூறிக்கொண்டு, இலங்கை அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 13-வது திருத்தத்தில் இருக்கின்ற விடயங்களைக் கூட நடைமுறைப்படுத்த முடியாத சூழ்நிலையில் இருக்கின்றன.
உங்களுக்குத் தெரியும் 30ஆம் திகதி 6ஆம் மாதம் 2006ஆம் ஆண்டு வடக்கு கிழக்கைப் பிரித்த கட்சியும் இது தான்.
வரி அறவீடு
"வரி அறவிட்டால் மட்டுமே இந்த நாட்டைப் பாதுகாக்க முடியும்" என கூறிக்கொண்டு பலதரப்பட்ட வரிகளை அறவிடக்கூடிய நிபந்தனைக்கு புதிய அரசாங்கம் உள்ளாக்கியிருக்கின்றது.
விவசாயத்தில் கிட்டத்தட்ட 18,000, 20,000 மானியத்தைக் கொடுத்து விவசாயம் செய்யக்கூடிய அளவுக்கு சூழ்நிலைகள் மாறியுள்ளன.

தற்பொழுது அரிசி ஒரு கிலோவின் விலை 240 ரூபாய். இந்த 18,000 ரூபாய்க்கும் 20,000 ரூபாய்க்கும் உரம் விற்பனை செய்யப்பட்டால் இந்த அரிசியின் விலை 500 ரூபாயாக மாறும் என்பதை மறந்துவிடக் கூடாது.
இந்த புதிய அரசு கடந்த வாரம் அரிசிகளை இறக்குமதி செய்திருக்கின்றார்கள். ஆகவே இந்த அரசுடன் சம்பந்தப்பட்ட விடயத்தில் நீங்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.
வடக்கு கிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் சம்பந்தப்பட்ட விடயத்தில், புதிய தேசியக் கட்சிகள் தமிழர்களுடைய உரிமைகளைச் சிதைப்பதற்காக பலதரப்பட்ட சதித்திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
தியாகிகளின் அர்ப்பணிப்பு
எதிர்காலத்தில் வடக்கு கிழக்கில் தமிழ் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமானால், ஆயுதப் போராட்டத்திற்காக நாங்கள் முழுமையாக அர்ப்பணிப்பு செய்த மக்களாக, இருப்போமேயானால், எதிர்காலத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கக்கூடியவாறு செயல்வடிவத்தைக் கொடுப்பதற்குரிய தலைவர்களாக நீங்கள் மாற வேண்டும்.
நாங்கள் இந்த விடயத்தில் பலவீனமடைவோமேயானால் எதிர்காலத்தில் எம்முடைய விழுமியங்களை மற்றவர்கள் ஆளக்கூடிய சூழ்நிலை உருவாகிக்கொண்டே வரும்.

இன்றுள்ள மட்டக்களப்பு மாவட்ட சூழ்நிலை உங்களுக்குத் தெரியும். ஆகவே இந்தத் தியாகிகள் தினத்தில் எதிர்காலத்தில் இந்தத் தமிழ் சமூகத்திற்காக என்னென்ன விடயங்களை நாங்கள் சீர்தூக்கிப் பார்த்து உழைக்க முடியுமோ, அந்த விடயங்களை நாங்கள் மிகவும் நேர்த்தியாகச் செய்வதற்கும் எங்களைச் சரியாகக் கொண்டு செல்வதற்கும் கடந்த கால தியாகிகளின் அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன.
எதிர்காலத்தில் தமிழ் சமூகத்திற்கு நல்ல சேவையைச் செய்வதற்கான உரத்தை நீங்கள் ஒவ்வொருவரும் இட்டிருக்கின்றீர்கள்.
உங்களால் இடப்பட்ட இந்த உரமானது எதிர்காலத்தில் சமூகமயமாக்கப்பட்டு, நல்ல பலன்களை இந்த மக்களுக்கு அளிக்கும் என்று நம்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.