காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்! யாழில் நீதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
காணாமல்ஆக்கப்பட்டோர் பிரச்சினையை தொடர்ந்து இழுத்தடித்து கொண்டு செல்வதற்கு எமது அரசு விரும்பவில்லை, எதிர்வரும் இரண்டு வருட காலங்களுக்குள் இந்த விசாரணைகள் அனைத்தையும் முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே எமது பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (20.06.2026) நீதி அமைச்சருக்கும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இந்த முக்கிய அறிவிப்பை விடுத்தார்.
யுத்தத்தின் பின்னரான நிலவரம்
அமைச்சர் தனது உரையில் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் நல்லிணக்கம் குறித்து மேலும் தெரிவிக்கையில், ஒரு யுத்தம் முடிவடைந்ததன் பின்பு அதில் வெற்றியாளர்கள் மட்டும் இருப்பதில்லை. யுத்தத்தின் பின்பு எல்லாவற்றையும் இழந்த இரண்டு பரம்பரைகள் தான் இந்த நாட்டில் இறுதியாக மீதமாக உள்ளன.
யுத்தம் செய்த பரம்பரையை விட, அந்த யுத்தம் முடிவடைந்த பின்பு மீண்டும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது, தேசிய ஒற்றுமையை வளர்ப்பது, அபிவிருத்தியை மேற்கொள்வது மற்றும் இங்கு இருக்கின்ற நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது போன்றவைதான் இன்றைய பரம்பரையின் தலையாய பொறுப்பாகும்.
அந்தப் பொறுப்பு என்பது யுத்தம் செய்வதையும் விட மிகவும் கடினமானதாகக் காணப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் என்ற வேறுபாடு இன்றி இந்த கடினமான பொறுப்பை நிறைவேற்றும்படி நாட்டின் மக்கள் அனைவரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுக்கு அந்தப் பாரிய பொறுப்பை வழங்கியிருக்கின்றார்கள் என்றார்.
கடந்த காலங்களை எடுத்துக் கொண்டால் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையின்மை காணப்பட்டது என்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டார்.

நிதிப் பங்களிப்பு வழங்கப்படவில்லை
அத்துடன், கடந்த காலங்களில் இருந்த ஆட்சியாளர்கள் அந்த அலுவலகங்களை முறையாக இயங்குவதற்குரிய நிதிப் பங்களிப்பை வழங்கவில்லை என்பதே உண்மை. ஆனால், எமது அரசு இப்போது அந்த குறைபாடுகளை முழுமையாக நிவர்த்தி செய்துள்ளது. அந்த அலுவலக நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளைத் தொய்வின்றி மேற்கொள்வதற்கான முழுமையான நிதி ஒதுக்கீடுகளை நாம் செய்திருக்கின்றோம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த விசாரணைகளின் இறுதி இலக்கு குறித்து அமைச்சர் மேலும் விளக்குகையில், எமது விசாரணைகளின் எதிர்பார்ப்பு வெறும் தரவுகளைச் சேகரித்து அவசரமாக வழக்குகளை மூடுவதல்ல. விசாரணைகளை உரிய முறையில் நடத்தி, இந்தச் சம்பவங்களுக்குக் காரணியாக இருந்த குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதே எமது நோக்கமாகும்.
அதேநேரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகளைச் செய்து, நியாயமான முறையில் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எமது விருப்பம் என்றார்.
காணாமல் ஆக்கப்பட்ட உயிர்களுக்குப் பதிலாகப் பணம் கொடுப்பதாக இருந்தால் அரசில் இருக்கும் நிதி போதாது என்று சுட்டிக்காட்டிய அவர், ஓர் உயிருக்கு இவ்வளவுதான் பெறுமதி என்று மதிப்பிட முடியாது என்றும், உயிர் என்பது மதிப்பிட முடியாத ஒன்று என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இந்த விசாரணைகளின் போது நீங்கள் எதிர்பார்க்கும் நீதி கிடைக்கும். சில வேளை நீங்கள் எதிர்பார்க்கும் நீதி கிடைக்காமலும் போகலாம். எல்லாம் தீர்மானிக்கப்படுவது கிடைக்கப்பெறும் சாட்சியங்களையும் உண்மையான தகவல்களையும் பொறுத்தே ஆகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
3 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், 12 பந்துகளில் 36 ரன் விளாசிய ஷானகா! சியாட்டில் அபார வெற்றி News Lankasri