அமெரிக்க நீதிமன்றத்தில் வெனிசுவேலா முன்னாள் ஜனாதிபதி மனு தாக்கல் - பரபரப்பை ஏற்படுத்திய புதிய நகர்வு
அமெரிக்க இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, தமக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளார்.
தாம் ஒரு நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் தமக்கு சட்டப் பாதுகாப்பு உரிமையுள்ளதாகவும், அமெரிக்காவினால் தாம் கைதுசெய்யப்பட்ட விதம் சர்வதேச சட்டங்களுக்கு முரணானது எனவும் கூறி இந்த மனுவை அவர் தாக்கல் செய்யவுள்ளார்.
எனினும், 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மதுரோவை வெனிசுவேலாவின் உத்தியோகபூர்வ ஜனாதிபதியாக அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை என்பதாலும், கடந்தகால வரலாற்றுச் சட்டப் முன்னுதாரணங்களின் அடிப்படையிலும் இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளதாக சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நிக்கோலஸ் மதுரோ மனு தாக்கல்
அமெரிக்கச் சட்டங்களின்படி, ஒருவர் எவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார் என்பதைக் காட்டிலும், அவர் மீதான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையே விசாரிக்கப்படும் என்பதால் மதுரோவின் கோரிக்கை நிராகரிக்கப்படக் கூடும் எனக் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த கோரிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில், நிக்கோலஸ் மதுரோவிற்கு எதிரான வழக்கின் விசாரணைகள் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.