இலங்கையில் பெரும் துயரம் - நண்பனை காப்பாற்ற சென்று காணாமல் போன இளைஞர்
ஹொரணை, நாரகல பாலம் அருகில் களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் காணாமல் போயுள்ள நிலையில் இருவர் காப்பற்றப்பட்டுள்ளனர்.
காணாமல் போன மூவரில் ஒரு இளைஞரை தேடும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நண்பர்கள் மூவரில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காணாமல் போனவர் 19 வயதுடைய, யால பிரதேசத்தைச் சேர்ந்த சிரான் சஸ்மித என்ற இளைஞர் என தெரியவந்துள்ளது.
காணாமல் போன இளைஞர்
நேற்று மாலை 7.30 மணியளவில் நீராடுவதற்காக குறித்த இடத்திற்கு வருகை தந்த 3 இளைஞர்களில் ஒருவர் நீரில் குதித்து நீந்த முயன்ற போது நீரோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன் போது ஏனைய 2 இளைஞர்கள் அவரை மீட்க நீரில் குதித்துள்ளனர். காப்பாற்ற முயன்ற இளைஞர்களும் நீரில் சிக்கிக்கொண்டதுடன், அவர்கள் கடும் சிரமத்தின் மத்தியில் பின்னர் கரையேறியுள்ளனர்.
இதனையடுத்து இது குறித்து ஹொரணை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
களு கங்கையின் நீரோட்டம் பலமான பகுதியில், இன்று காலை பொலிஸ் கடற்படைப் பிரிவின் மீட்புக் குழுவினரை ஈடுபடுத்தி காணாமல் போன இளைஞரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன், அப்பகுதியில் முதலைகளின் நடமாட்டம் காணப்படுவதால் ஆற்றங்கரையில் தீ மூட்டுவதற்கும் பிரதேசவாசிகளும் நண்பர்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.