ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் டக்ளஸ்!
மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மக்களின் நலன்களையும், அவர்களது எண்ணங்களையும் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குபவர்களின் ஆற்றல், ஆளுமை மற்றும் அக்கறை என்பன மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒருங்கிணைப்புக் குழுத் தலைமையின் அசமந்தப் போக்கு
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அண்மைக்காலமாக தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன என்றும், உருப்படியான தீர்வுகள் எட்டப்படுவதில்லை என்றும் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்திவிட்டு, ஒருங்கிணைப்புக் குழுத் தலைமை தட்டிக்கழிக்கும் போக்கைக் கடைப்பிடிப்பதால் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மறைக்கப்படுகின்றன.

இருதரப்பு முரண்பாடுகளால் எவ்வித முன்னேற்றமும் இன்றி அரச நிதி மாத்திரம் வீணடிக்கப்பட்டு கூட்டங்கள் நிறைவடைவதாக மக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி நிலவுகின்றது.
ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, புதிய அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பல வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும், மக்களின் நலன்களைப் பேணக்கூடிய அல்லது பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய எவ்விதமான வினைத்திறன் மிக்க அணுகுமுறைகளையும் முன்னெடுப்பதாகத் தெரியவில்லை.
மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் கூட்டங்கள் என்பவை அந்தந்தப் பகுதியின் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரத் தேவைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வுகளைப் பெறுவதற்காக நடத்தப்படுபவை.

ஆனால், தற்போது நடத்தப்படும் கூட்டங்களில் பொதுமக்கள் தமது நியாயமான பிரச்சினைகளை முன்வைக்கவோ அல்லது தீர்வுகளைப் பெறவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சமூக ஊடகங்கள் வாயிலாகவும், நேரடிச் சந்திப்புகள் மூலமாகவும் எனக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
நாம் பொறுப்பில் இருந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் செய்திகளைச் சேகரிக்க எவ்விதத் தடையுமின்றிச் சுதந்திரமாக அனுமதித்திருந்தோம்.
ஆனால் இன்று ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் ஊடகவியலாளர்களுக்குச் சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுவதும், அவர்கள் தட்டிக்கழிக்கப்படுவதும் துரதிஷ்டவசமானது. மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு, இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் நான் பேச்சு நடத்தவுள்ளேன் என்றார்.