சூடான் தங்க வர்த்தகத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை
சூடானில் தொடர்ந்து நீடித்து வரும் இராணுவ மோதல்களுக்கு நிதி திரட்டுவதைத் தடுக்கும் நோக்கில், அந்நாட்டின் தங்க வர்த்தகத்தை இலக்கு வைத்து புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த புதிய முடிவின்படி, சூடானை பூர்வீகமாகக் கொண்ட தங்கம் எதையும் வாங்குவதற்கோ, இறக்குமதி செய்வதற்கோ அல்லது கைமாற்றுவதற்கோ முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி, தங்கம் பிரித்தெடுக்கப் பயன்படும் பாதரசம் மற்றும் சயனைடு ஆகிய வேதிப்பொருட்களைச் சூடானுக்கு விற்பனை செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் அல்லது ஏற்றுமதி செய்வதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.
உள்நாட்டுப் போர்
சூடான் நாட்டின் அதிகாரப்பூர்வ இராணுவத்திற்கும், துணை இராணுவப் படையான 'விரைவு ஆதரவுப் படைகளுக்கும்' இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த கொடூரமான உள்நாட்டுப் போர், அந்நாட்டில் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், போருக்கான முக்கிய நிதி ஆதாரமாக விளங்கும் தங்க வர்த்தகத்தை முடக்குவதன் மூலம் அங்கு வன்முறையைக் குறைக்க முடியும் என்று ஐரோப்பிய ஒன்றிய பேரவை தெரிவித்துள்ளது.