வடக்கின் கடல் பாதுகாப்பை கண்காணிக்க டக்ளஸ் புதிய திட்டம்
வடக்கின் கடல் பாதுகாப்பை கண்காணிப்பதற்காக “கடல் சாரணர்கள்” என்ற தொண்டர் அமைப்பை உருவாக்க அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்,
“வடக்கின் கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினர் முடியுமானவரை தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத கடற்றொழில்
ஆனாலும் எமது கடல் வளங்களும் எமது கடற்றொழிலாளர்களது கடற்றொழில் உபகரணங்களும் சட்டவிரோதமாக எமது கடற்பரப்புகளுக்குள் உள் நுழையும் இந்திய கடற்றொழிலாளர்களால் அழிக்கப்பட்டுவரும் நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் கடற்பரப்பின் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மற்றுமொரு முயற்சியாக குறித்த யோசனையை நான் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளேன்.
அதாவது கடல் பகுதிகளை கண்காணிப்பு செய்வதற்காக கடல் சாரணர் அமைப்பு என்ற ஒரு தன்னார்வ அமைப்பை உருவாக்கி அவர்களையும் குறித்த இந்திய கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை கண்காணித்து கடற்படையினரது உதவியுடன் கட்டுப்படுத்த முடியும் என கருதுகின்றேன்” என தெரிவித்துள்ளார்.
ரணில் இணக்கம்
மேலும், இந்து, சைவ மக்களின் விசேட வழிபாட்டிற்குரிய சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான உண்மைகளை கண்டறிந்து, தேசிய நல்லிணக்கத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொளள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சரினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆம் திகதி இரவு நேர சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்வதற்கு
வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இரவு
நேரத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட முடியாது என்று தெரிவித்த பொலிஸார்,
வழிபாடுகளை தடுத்து நிறுத்தியதுடன் ஆலய நிர்வாகத்தினர் எட்டுப் பேரை கைது
செய்து தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக வழக்கு தாக்கல் செய்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |