யாழில் இடம்பெறும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை
எதிர்வரும் 10 நாட்களுக்குள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கடத்தல் சம்பந்தப்பட்ட விடயங்களை கட்டுப்படுத்துமாறு கடற்தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா உத்தரவிட்டுள்ளார்.
யாழ். குடாநாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் ஒன்று கடற்தொழில் அமைச்சர் தலைமையில் நேற்று (15.09.2023) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து கடற்தொழில் அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
10 நாளைக்குள் நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்ட மக்கள் நீண்ட காலமாக பல பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றார்கள்.
அதில் ஒரு பிரச்சனையாக இருக்கின்றது, சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் சட்ட விரோதமாக கால்நடைகளை கடத்துதல் இவற்றை கட்டுப்படுத்துவதற்காக, ஒரு முயற்சியாக பொலிஸார், படையினர் மற்றும் எங்களுடைய பிரதேச செயலாளர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுடன் ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளோம்.
10 நாளைக்குள் இதனுடைய முன்னேற்றங்களை பார்த்து அதற்கு பிறகு அடுத்த கூட்டங்களில் இன்னும் முன்னேற்றுவதற்காக கலந்துரையாடலை நடத்துவதற்காக தீர்மானித்திருக்கின்றோம்.
இதன் போது யாழ்ப்பாண பழ கடைகளில் நிற்கின்ற இளைஞர்கள் போதைப்பொருளை பாவித்து விட்டு பொதுமக்களிடம் பிரச்சனை படுகின்றமை தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது?
இதற்கு பதில் வழங்கிய அமைச்சர், இந்த விடயம் இதுவரை எனது கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை, நீங்கள் தான் இந்த விடயத்தை கூறி இருக்கிறீர்கள் நன்றி நான் இதனை உடனடியாக பிரதி பொலிஸ் மா அதிபரிடம் அறிவிக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |