வேலை நிறுத்த போராட்டம்: சுகாதார தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் இயங்கி வரும் சுமார் 30 சுகாதார தொழிற்சங்கங்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை நாளை (03.07.2023) முன்னெடுப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளன.
சுகாதார தொழிற்சங்கங்களை ஒடுக்கும் வகையில் சுகாதார அமைச்சர் செயலாளர் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொழிற்சங்கங்களை ஒடுக்கும் வகையில் சுகாதார அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தை மீள பெற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கைக்கு அமைய இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சுகாதார துறையில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக அவை வெளிக்கொண்டுவரப்படுவதை தடுக்கும் வகையில் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அறிவிப்பு
இந்த சுற்று நிருபம் உடனடியாக மீளபெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என சுகாதார தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நோயாளிகள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் அதற்கான பொறுப்பினை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த தொழிற்சங்க போராட்டத்தில் இணைந்து கொள்ள போவதில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சுகாதாரத் துறை சார் பணியாளர்கள் ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிடுவதை தவிர்க்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தை மீள பெற்றுக் கொள்ளப் போவதில்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.