நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் சேவை புறக்கணிப்பில் ஈடுபடும் மருத்துவர்கள்
ஏழு கோரிக்கையை அடிப்படையாக கொண்டு நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் சேவை புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளை காலை 8 மணி முதல் இந்த சேவை புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் எனவும் அந்த சங்கம் கூறியுள்ளது.
மருத்துவர்களின் சேவை புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் அத்தியாவசிய சேவைகள் நடைபெறும் எனவும் மருத்துவர்கள் நாடு முழுவதிலும் கடமையில் இருந்து விலகி இருப்பார்கள் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.
தீர்மானங்கள் குறித்து கலந்துரையாட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு இன்று கூடியது. இதன் போது, நாட்டுக்கும், சுகாதார துறைக்கும், மருத்துவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் 7 பிரதான விடயங்கள் அடையாளம் காணப்பட்டன.
அந்த 7 விடயங்களை அடிப்படையாக கொண்டு நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் மருத்துவர்களின் சேவை புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
நாளைய தினம் முதல் நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் மருத்துவர்களின் சேவை புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும். அத்தியவசிய சேவைகள், அவசர சிகிச்சைகள் என்பன எந்த தடையும் இன்றி நடைபெறும்.
அதேபோல் சிறுவர், பெண்கள், புற்று நோய், சிறுநீரக வைத்தியசாலைகளின் பணிகள் எந்த தடையும் இன்றி நடக்கும். எனினும் ஏனைய மருத்துவமனைகளில் பணிகள் பாதிப்படையும். சுகாதார அமைச்சு, மருத்துவர்களின் இடமாற்றம் மற்றும் பிரதானமாக பாதிப்பை ஏற்படுத்தும் ஏனைய பிரச்சினை பற்றி பேசி தீர்க்காது, சேவை புறக்கணிப்பின் மூலம் தீர்ப்பதற்கு தள்ளியுள்ளமையே இதற்கு காரணம் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.