மக்களுடனான கூட்டங்களுக்கு அழைப்பு விடுப்பதில்லை! வலி.தென்மேற்கு பிரதேச சபை குற்றச்சாட்டு
மக்களுக்கான கூட்டங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் ஆகிய எமக்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்பு தான் அழைப்புகள் வருகின்றதென வலி. தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
கிராமத்துடனான கலந்துரையாடல் மூலமான பிரதேச அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் பிரதேச மட்டத்திலான கலந்துரையாடல் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாறான சந்திப்புகள் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் நடைபெறுகின்றன என்பது தொடர்பில் சமூக வலைத்தளங்களின் ஊடாக அறிந்து பிரதேச செயலாளருக்கும் அல்லது அரசாங்க அதிபருக்கும் தெரியப்படுத்தி தான் நாங்கள் எங்களுக்கான அழைப்பை பெற வேண்டியுள்ளது.
அந்த வகையிலே, இன்றைய சந்திப்பு ஒரு மணித்தியாலத்துக்கு முன்பாக தான் எனக்கும், உறுப்பினருக்கும் கிடைக்கப்பெற்றது. உண்மையிலேயே நாட்டினுடைய அபிவிருத்தி திட்டத்திலேயே ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதில் மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களுக்கு மாற்றுக் கருத்துக்களுக்கு எவையுமில்லை. நாம் ஒன்றாக இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றோம்.
அபிவிருத்தித் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதற்கு பிரதேச சபையை முழுமையாக புறமொதுக்கி அபிவிருத்தி வேலைகளை கட்டுமானங்களையும் மேற்கொள்கின்ற சந்தர்ப்பத்திலே அதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலைப்பாடு எங்களுக்கு இருக்கின்றது.
எனவே தேசிய சுற்றறிக்கைகளுக்கு அமைவாக ஒரே நாடு ஒரே சட்டம் என்பதுபோல எங்களுடைய பிரதேசங்களிலே எங்களுடைய மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கி அதற்குரிய உள்வாங்கல்களை எடுப்பதில் என்ன ஆட்சேபணை என்பது எனக்கு தெரியவில்லை.
ஒவ்வொரு தடவையும் நான் பிரதேச செயலாளரிடம் எடுத்து கேட்டு அதன் பிற்பாடு அரசாங்க அதிபரோடு கதைத்து தான் ஒவ்வொரு கோரிக்கைகளையும் பெற வேண்டி இருக்கின்றது. இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் தனது குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த அங்கஜன் இராமநாதன்,
ஆரம்பத்திலேயே பிரதேச தவிசாளர்கள்,உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை என்பதை அறிந்த பின் உடனடியாக தொடர்புகொண்டு பிரதேச செயலகத்தினருக்கு அறிவுறுத்தியிருந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அந்தவேளையில், வலி. தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோ, கடந்த 15ஆம் திகதி குறித்த கூட்டங்களிற்கான கடிதம் ஒன்று மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகின்றது.
ஆனால் இங்கே எமக்கு 17ஆம் திகதி திகதி இடப்பட்டு எமக்கு தொலைநகல் மூலமாக ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. இதை நாங்கள் இங்கு முன்வைப்பதற்கான காரணம் நாங்கள் உங்களுடன் இணைந்து பங்காளிகளாக அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்றால் நீங்கள் எங்களுக்கு அதற்குரிய ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.
நீங்களும் எங்களை மதிக்க வேண்டும். உதாரணத்துக்கு இன்று இந்த கூட்டத்திலேயே ஒரு சம்பவம் சொல்லப்பட்டது. ஒரு பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்கு பிரதேச சபையினால் எவ்வளவு பெரிய வேலையினை செய்யக்கூடியதாக இருக்கின்றது என்பதனை நாம் இங்கே செய்து காட்டியிருக்கின்றோம். செய்து கொண்டிருக்கின்றோம்.
இதற்கு நாம் மத்திய அரசாங்கத்தின் உடையதோ இதர உதவிகளையோ நாடவில்லை. எங்களால் செய்யக்கூடிய விடயங்கள் எவையோ அதை நாங்கள் மக்களுக்காக சேவையாற்றி கொண்டிருக்கின்றோம்.
எனவே நாம் இங்கு உங்களிடம் கேட்பது மக்களுக்குரிய திட்டங்களுடன் பிரதேச சபையினர் இணைந்து செயற்படுவதற்கு உரிய அறிவித்தல்களை உரிய நேரத்திற்கு எமக்கு வழங்கப்படுமிடத்து அதனுடன் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்றார்.
இதற்கு பதிலளித்த அங்கஜன் இராமநாதன்,
உங்களுக்கு கடிதம் போடுவது எனது பணியல்ல.அதற்கென்று மாவட்ட செயலகத்தில் ஒரு அலுவலகம் இருக்கின்றது. அவர்களே உங்களுக்கான அழைப்புக் கடிதங்களை அனுப்புவார் என்றார்.
இதற்கு பதிலளித்த உறுப்பினர், நாங்கள் உங்களை கடிதம் போட சொல்லவில்லை.அது உங்களுடைய வேலையும் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த துணைத்தலைவர் பிரதேச சபையினருக்கு தனி ஒரு
கூட்டம் போடுவோம் இப்படியான காரணங்களினால் தான் உங்களை கூட்டங்களுக்கு
கூப்பிடுவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.