திருகோணமலையில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல்
தனியார் துறையினரின் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான திறன் விருத்தி மூலம் காலநிலை மற்றும் அனர்த்தங்களை தாங்கும் வியாபாரத் திட்டம் பற்றிய கலந்துரையாடலானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் நேற்று (16) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
அனர்த்த அபாயத்தைக் குறைத்தல், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் காலநிலைச் சேவைகளில் தனியார் துறையின் திறன்களை மேம்படுத்த உலக உணவுத் திட்டத்துடன் (WFP) இலங்கை வர்த்தக சம்மேளனம் (Chambers of commerce) கைகோர்த்துள்ளது.
இத்திட்டமானது குருநாகல், நுவரெலியா, மொனராகலை, திருகோணமலை, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து பின்வரும் முக்கிய நோக்கங்களை வழங்குவதற்காக உத்தேசித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவம்
அனர்த்த அபாயக் குறைப்பு மற்றும் காலநிலை மாற்ற பாதிப்பிலிருந்து தனியார் துறை நிறுவனங்களின் திட்டங்களையும் திறன் இடைவெளிகளையும் புரிந்துகொள்வது, காலநிலை மாற்றத்தின் தாக்கங்களால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய தொழில்களில் மற்றும் வியாபார ரீதியான நிறுவனங்களுக்கான வணிக தொடர்ச்சித் திட்டங்களை உருவாக்குதல், மாகாண மற்றும் தேசிய அளவிலான தனியார் துறையினரின் அபாயக் குறைப்பு செயற்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றிய அறிவூட்டல்களை வழங்குதல், தேசிய அமைப்புகளுடன் இணைந்த முன் எச்சரிக்கை தகவலை மேம்படுத்துவதற்கான தீர்வுகளை அடையாளம் காணுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்த திட்டம் அரசாங்கம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு , இலங்கை வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
மேலும் பாதிக்கப்பட்ட தொழில்கள், தகவல்களை பெறுவதற்கான இடைவெளிகள், சேவை வழங்குநர்கள் மற்றும் அரசு நிறுவனங்களால் வழங்கப்படும் ஆதரவு, அபாயங்களைக் குறைப்பதற்கான தற்போதைய விருப்பங்கள், உத்திகள் பற்றிய அறிவு, வணிக சங்கங்கள், நிதி, இயற்கை பேரிடர்களுக்கு எதிரான காப்பீடு, வங்கிக் கடன்களுக்கான சலுகைகளும் திருப்பிச் செலுத்துதல் போன்ற பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ், துறைசார் அதிகாரிகள், குறித்த பிரதேச செயலாளர்கள், குறித்த உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
