பொறுப்புக்கூறல் விடயங்களில் காது கேளாத மௌனத்தையே கடைபிடிக்கும் இலங்கை அரசாங்கம்
வடக்குகிழக்கில் காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கம் தாமதான செயற்பாட்டை முன்னெடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வுகள் இடம்பெறுகின்ற காலத்தில் சில முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றபோதும் பின்னர் அந்த விடயங்கள் கிடப்பில் போடப்பட்டு வருகின்றன.
தற்போது பொருளாதார பின்னடைவுகள் இந்த தாமதங்களுக்கான காரணங்களாக கூறப்படுகின்றன.
மனித உரிமை மீறல்
இதனை மையப்படுத்தியே இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் தூதுவர் நேற்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயங்களில் பற்றாக்குறை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், ஊழல் அல்லது அதிகார துஸ்பிரயோகம் என கூறப்படும் பொறுப்புக்கூறல் பற்றாக்குறையால் இலங்கை தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் குறித்த பிரச்சினைகள் தவிர ஏனைய குற்ற வழக்குகள் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கம் காது கேளாத மௌனத்தைக் கடைப்பிடிக்கிறது என்று ஆங்கில ஊடகம் ஒன்று விமர்சனம் வெளியிட்டுள்ளது.
முன்னாள் பத்திகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க மற்றும் ரக்கர் வீரர் வசீம் தாஜுதீன் உள்ளிட்டவர்களின் கொலைகள் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க 2015 ஆம் ஆண்டு நீதி வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.
ரணிலின் உறுதிமொழி
எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்ச வெளியேற்றப்பட்டு, விக்ரமசிங்கவும் அவரது நிர்வாகமும், பதவியேற்றப்பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எந்த உறுதிமொழியும் வழங்கவில்லை.
2006 ஆம் ஆண்டு திருகோணமலையில் கொல்லப்பட்ட தமது மகன் உட்பட்ட ஐந்து மாணவர்கள் தொடர்பில் ரகிஹரின் தந்தையான காசிப்பிள்ளை மனோகரன் தொடர்ந்தும் நீதியை எதிர்பார்க்கிறார்.
சர்வதேச மன்னிப்புச் சபை தனது மகனின் வழக்கைத் தொடர்ந்ததாகவும், இப்போது மற்றொரு வெளிநாட்டவர், நீதியை உறுதிப்படுத்த உதவுவதாகவும், மனோகரன் ஆங்கில செய்தித்தாளிடம் கூறியுள்ளார்.
விசாரணைகளில் முன்னேற்றம் இல்லாதது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை என முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.
தமது தந்தையின் கொலையாளிகளுடன் இந்த அரசாங்கம் மிகவும் நெருக்கமாக இருப்பதால், அவரது கொலை விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது தமக்கு ஆச்சரியமாக இல்லை.
நீதிக்கான போராட்டம்
அத்துடன் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆட்சியில், தமது குடும்பத்தினருக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், நீதிக்கான தமது போராட்டம் இன்னும் வெகு தொலைவில் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
சர்வதேச நீதிமன்றங்கள் மூலமாகவோ அல்லது நிறுவனங்கள் மூலமாகவோ, இந்த அட்டூழியங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 2006 இல் திருகோணமலை எக்சன் பெய்ம் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டமை, 2008 ஒகஸ்ட் மற்றும் 2009 மார்ச் மாதங்களுக்கு இடையில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனது மற்றும் 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை சம்பவம் என்பன தொடர்பில் அரசாங்கம் காது கேளாத மௌனத்தையே கடைபிடிக்கிறது என்று கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |