கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகம் மீது குற்றஞ்சாட்டும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு
கிளிநொச்சி (Kilinochchi) கரைச்சி பிரதேச செயலகம் மீது மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தற்போதைய நிர்வாகத்தினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் அமைப்பானது கரைச்சி பிரதேச செயலகத்தினால் பதிவு செய்யப்பட்டிருந்த போதும் அந்த அமைப்பினை கண்காணிக்க கரைச்சி பிரதேச செயலகம் தவறியுள்ளது.
தற்போதைய புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் கடந்த நிர்வாகத்தினரால் பொறுப்புக்கள் எவையும் ஒப்படைக்கப்படாதது தொடர்பில் கரைச்சி பிரதேச செயலகம் பாராமுகமாக இருப்பதாக மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கரைச்சி பிரதேச செயலகத்திற்கு செல்லும் மாற்றுத்திறனாளிகளான தங்களை அங்குள்ள அதிகாரிகள் ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை என மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் செயலாளர் குறிப்பிட்டிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
பலமுறை வாய் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் பழைய நிர்வாகத்தினரிடமிருந்து கணக்கறிக்கைகள் மற்றும் செயற்பாட்டறிக்கைகளை சொத்துக்கள் உள்ளிட்ட பொறுப்புக்களை பெற்றுத்தர கோரியிருந்த போதும் கரைச்சி பிரதேச செயலகத்தினர் எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்காதிருப்பது கவலைக்குரிய விடயமாகும் என அவர் குறிப்பிட்டார்.
பழைய நிர்வாகம்
கடந்த ஏழு வருடங்களாக கரைச்சி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்டு இயங்கி வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பழைய நிர்வாகத்தினரின் செயற்பாடுகள் வரவேற்கக் கூடிய முறையில் அமைந்திருக்கவில்லை.
புலம் பெயர்ந்து வாழும் பலரும் மாற்றுத்திறனாளிகளுக்கென வழங்கியிருந்த பெருந்தொகையான நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை. நிதியளிக்கப்பட்டு இருப்பதற்கான சான்றுகளை திரட்டியுள்ள போதும் அது பயன்படுத்தப்பட்ட முறையினை பெற்றுக்கொள்ள முடியவில்லை என மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் புதிய நிர்வாகத்தினர் குறிப்பிடுகின்றனர்.
உரிய முறையில் செயற்பாட்டறிக்கைகள் பேணப்படவில்லை.அத்தோடு கணக்கறிக்கைகள் பேணப்படவில்லை. புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படும் போது புதிய நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட வேண்டிய கணக்கறிக்கைகள், செயற்பாட்டறிக்கைகள் என எவையும் தம்மிடம் இதுவரை கையளிக்கப்படவில்லை.
பழைய நிர்வாகத்தின் செயலாளர் தான்தோன்றித்தனமாக செயற்பட்டு வந்ததோடு பொறுப்பு வாய்ந்த நிர்வாக முறையினை பேணியிருக்கவில்லை என மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் புதிய செயலாளருடன் மேற்கொண்ட உரையாடலின் போது அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
புதிய நிர்வாகத் தெரிவு
இந்த நிலையில் கரைச்சி பிரதேச செயலகம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் பழைய நிர்வாகத்தினரின் செயற்பாடுகளை கண்காணித்து அவற்றை நெறிப்படுத்த தவறியிருக்கின்றது.
புதிய நிர்வாகத் தெரிவுக்கு வழங்கப்பட்ட அழுத்தத்தினை அடுத்தே இந்த புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அப்படி புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படும் போது பழைய நிர்வாகத்தினரின் செயற்பாடுகளை முடிவுறுத்தியிருக்க வேண்டும்.
பழைய நிர்வாகம் பொறுப்புடன் நடந்திருக்கும் சூழலில் புதிய நிர்வாகத் தெரிவு நடைபெறும் போது கணக்கறிக்கைகள் மற்றும் செயற்பாட்டறிக்கைகள் சொத்துக்கள் என்பனவற்றை அவற்றுக்கான உரிய ஆவணங்களுடன் புதிய நிர்வாகத்திடம் கையளித்திருக்க முடியும்.
எனினும், அவ்வாறு எத்தகைய ஒரு செயற்பாடுகளும் நடைபெறவில்லை என்பதனை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் புதிய நிர்வாகத்தினருடனான உரையாடலின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
பொறுப்பற்ற கரைச்சி பிரதேச செயலகம்
ஒரு சமூக சேவை அமைப்பினரின் புதிய நிர்வாக தெரிவினைக் கூட கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தினால் நெறிப்படுத்த முடியவில்லை என்ற கேள்வி எழுவதாக சமூக ஆர்வலர் சிலர் குறிப்பிடுகின்றனர்.
பெரும்தொகை நிதி உள்ளீர்க்கப்பட்டு உள்ளதோடு அந்த நிதி நன்கொடையாக சமூக சேவையினை நோக்காக கொண்டு வழங்கப்பட்டிருக்கின்றது.இந்த சூழலில் பிரதேச செயலகம் எப்படி மாற்றுத்திறனாளிகள் அமைப்பினை கட்டுப்படுத்தி நெறிப்படுத்த தவறியிருந்தது என்ற கேள்வி பல சந்தேகங்களை எழுப்புகின்றது.
வெளிப்படைத் தன்மையோடு பழைய நிர்வாகம் இயங்கியிருக்குமானால் அதனை கரைச்சி பிரதேச செயலகம் கண்காணித்து கட்டுப்படுத்தி நெறிப்படுத்தியிருந்தால் புதிய நிர்வாகத் தெரிவின் போது மேற்படி கணக்கறிக்கைகள் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களையும் புதிய நிர்வாகத்திடம் கையளிப்பதில் தடங்கல் ஏற்பட்டிருக்காது.
இவ்வாறான சூழலில் கரைச்சி பிரதேச செயலகமும் இணைந்து மோசடிகளில் ஈடுபட்டுள்ளதோ என்ற சந்தேகம் வலுவாக தோற்றம் பெறுவதை தடுக்க வேண்டும் ஏனெனில் கரைச்சி பிரதேச செயலகம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் பழைய நிர்வாகத்தினரிடம் இருந்து பொறுப்புக்களையும் உரிய பதிவுகள் மற்றும் அறிக்கைகள் சொத்துக்களை புதிய நிர்வாகத்தினரிடம் பெற்றுக் கொடுக்க துரித நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என இது தொடர்பில் சமூக விடய ஆய்வாளருடன் மேற்கொண்ட கேட்டல்களின் போது அவர் மேற்கண்டவாறு தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
இவ்வாறு செயபடுவதற்கு கரைச்சி பிரதேச செயலகத்திற்கு நடைமுறையில் உள்ள நிர்வாக சட்டங்களுக்கு ஏற்ப எத்தகைய தடைகளும் இருக்கப்போவதில்லை என்பதும் இங்கே நோக்கத்தக்கது.
பொது அமைப்புக்களின் நிர்வாகம்
பொதுவாக ஒரு பொது அமைப்புக்கென சில கட்டுப்பாடுகளை நிர்வாகவியல் வகுத்துக் கொடுத்துள்ளது என்பது அனைவருக்கும் வெள்ளிடை மலையாகும்.
எனினும் ஊழல் மோசடிகள் தோன்றும் போது அவை நீறு பூத்த நெருப்பாகி விடுகின்றன என நிர்வாகவியலில் தேர்ச்சி மிக்க ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவருடன் பொது அமைப்புக்களின் கட்டமைப்பும் செயற்பாடும் என்ற தொனிப்பொருளில் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது அவர் குறிப்பிட்டிருந்தார்.
தலைவர், செயலாளர், பொருளாளர் என்றும் பின்னர் இவர்களுக்கான துணைநிலை பதவிகளுக்கு என்றும் தெரிவுகள் நடைபெறுவதோடு பிரிவுகள் சார்ந்து அல்லது பொதுவாக குறிப்பிட்டளவு உறுப்பினர்களையும் கொண்டதாக இருக்கும்.
நிதி வருவாய் மற்றும் வருமானமீட்டும் வழிமுறைகள் என அறிக்கைகள் பேணப்படும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது அதற்கென தனியான விதிமுறைகளினால் அவை ஒழுங்காக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் அல்லது உரிய கால இடைவெளிகளில் பொதுக்கூட்டம் அவசியமானது.அந்த கூட்டத்தில் கடந்த கணக்கறிக்கைகள், செயற்பாட்டறிக்கைகள் என்பன முன்வைக்கப்பட்டு சபையில் கூடிய மக்கள் முன் விளக்கமளிக்கப்படும்.
நிர்வாக கூட்டங்களும் அதில் கலந்தாலோசணைகளும் நடைபெறும்.
இப்படியான நடைமுறை பேணப்பட்டிருந்தால் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் புதிய நிர்வாகத் தெரிவின் போதும் உரிய ஆவணங்களை ஒப்படைத்து இருக்கலாம்.
கடந்த வருடம் ஆவணி மாதத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரு நிர்வாகத்திற்கு தொடர்ந்து சிறப்பாக தங்கள் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல பழைய நிர்வாகத்தின் தொடர்ச்சியை பேண அவர்களிடம் இருந்து அறிக்கைகளை பெற வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை நியாயமானதே!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |