வீட்டிலிருந்து பொரளை மயானம் செல்லும் வழியில் நிறுத்தப்பட்ட தினேஷின் கார்! வெளியான புதிய தகவல்
கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் குறித்த சம்பவம் தொடர்பான பல புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இடை நடுவில் நிறுத்தப்பட்டுள்ள வாகனம்
அந்த வகையில் தினேஷ் சாப்டர் தனது வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் பொரளை பொது மயானத்திற்கு சென்றுள்ளதுடன் இடை நடுவில் ஒரேயொரு இடத்தில் மாத்திரம் தான் பயணித்த வாகனத்தை நிறுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்படி அவர் தனது வீட்டுக்கும் பொரளை பொது மயானத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் சிற்றுண்டி உண்பதற்காக வாகனத்தை நிறுத்தியுள்ளமை குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பல இடங்களில் 42 சிசிடிவி கமரா அமைப்புகளின் காட்சிகள் தற்போது குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
தினேஷின் மனைவியிடம் வாக்குமூலம்
இதேவேளை நேற்றைய தினம் (19.12.2022) தினேஷின் மனைவியிடம் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
4 மணித்தியாலங்களுக்கும் மேலாக அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள போதும் மீண்டும் தேவைப்பட்டால் அவரது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணை பிரிவினர் பிரத்தியேக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
தனியார் காப்புறுதி நிறுவனத்தின் பணிப்பாளரான பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் படுகொலை தொடர்பாக அவரது மனைவியிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று மாலை 4 மணித்தியாலங்களுக்கு மேலாக அவரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
தினேஷ் ஷப்டர் கொலைச் சம்பவம் தொடர்பில் 15 பேர் சந்தேகிக்கப்படுகின்றனர் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையில் 40 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது எனவும், ஷாப்டரின் நெருங்கிய உறவினர்கள் சிலர் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
செய்தி - ராகேஷ்



