இலங்கையை கட்டுப்படுத்த இந்தியா தீட்டும் திட்டம்: வசந்த முதலிகேயின் பாரிய குற்றச்சாட்டு
இந்தியா எமது தரவுகளைத் திருடி அதன் மூலம் எங்களைக் கட்டுப்படுத்தும் உத்தேசம் அவர்களிடம் உள்ளது.
அதற்கு இலங்கை அரசாங்கம் வழியமைத்து கொடுப்பது போல் எமது உயிரியளவியல்(Biometric) தரவுகளைக் கொண்ட அடையாள அட்டை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை இந்தியாவிற்குத் தாரை வார்த்துள்ளது என்று மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
கைரேகை மற்றும் விழித்திரை தரவுகள்
அத்தோடு இலங்கை மக்களின் கைரேகைகள் மற்றும் விழித்திரை தரவுகளை கறுப்புப் பட்டியலில் உள்ள இந்திய நிறுவனமொன்றுக்கு வழங்கவே அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
2012 ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் அடையாள அட்டைகளுக்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இதற்காக இதுவரை 560 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதுடன் அதற்குத் தேவையான அனைத்து மென்பொருட்களும் உருவாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.

இன்னும் சுமார் 60 கோடி ரூபாயில் அந்தப் பணியை நிறைவு செய்ய முடியும். ஆனால் இலங்கை அரசாங்கத்தின் அந்த முயற்சியையும் மக்களது பணத்தையும் புறந்தள்ளிவிட்டு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வெளியிடுவதற்கான தொழில்நுட்ப முறைகளைத் தயாரிக்கும் பொறுப்பை இந்தியாவிற்கு வழங்க 2021 இல் கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுத்தார்.
இலங்கை அரசாங்கம் இதற்கான டெண்டர்களைக் கோரியிருந்தாலும் விண்ணப்பித்த நிறுவனங்கள் தகுதிகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால் அந்த முயற்சி தற்காலிகமாகத் தடைப்பட்டது.
கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனம்
பின்னர் 2023 இல் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் டெண்டர்களைக் கோரி மதுவரி மோசடியுடன் தொடர்புடையதாகக் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட 'மெட்ராஸ் செக்யூரிட்டி பிரிண்டர்ஸ்' (Madras Security Printers) நிறுவனத்திற்கு அதனை வழங்க முயற்சித்தது.
அநுர திசாநாயக்க ஜனாதிபதியான பின்னர் 2025 ஜனவரி மாதம் இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டதுடன் அதன்படி டெண்டர் கோரும் அதிகாரத்தையும் இந்தியாவிற்கே வழங்கியுள்ளார்.
இந்த பாரிய தவறு காரணமாக இது தொடர்பாக எவ்வித அழுத்தத்தையும் பிரயோகிக்கும் திறன் இலங்கைக்கு இல்லாமல் போயுள்ளது.
ஆரம்பத்தில் இதற்காக ஐந்து இந்திய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் 2026 மார்ச் மாதளவில் ஆறாவது நிறுவனம் பதிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
அதுவும் இலங்கையில் கறுப்புப் பட்டியலில் உள்ள 'மெட்ராஸ் செக்யூரிட்டி பிரிண்டர்ஸ்' நிறுவனமே ஆகும். அந்த நிறுவனம் கறுப்புப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதா? அவ்வாறு நீக்கப்பட்டால் அதற்கான காரணங்கள் என்ன?
அல்லது இலங்கையில் கறுப்புப் பட்டியலில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு இலங்கையின் அரச திட்டமொன்றை வழங்க இந்தியாவிற்கு உள்ள அதிகாரம் என்ன?
டெண்டர் கோரும் அதிகாரத்தை இந்தியாவிற்கு வழங்கியது ஏன்? போன்ற கேள்விகளுக்கு ஜனாதிபதி உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் என வசந்த முதலிகே குறிப்பிட்டுள்ளார்.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri