திறைசேரி அதிகாரியின் மரணம்: ஒரு திட்டமிட்ட படுகொலையா - முஜிபுர் ரஹ்மான்
திறைசேரியில 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரி ஒருவரின் மரணம், அரசாங்கம் கூறுவது போலத் தற்கொலை அல்ல, அது ஒரு திட்டமிட்ட படுகொலை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மே தினக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தற்கொலை என்ற கூற்றை மறுப்பு திறைசேரியில் இடம்பெற்ற 2.5 மில்லியன் டொலர் மோசடி தொடர்பாக நிதி அமைச்சின் நான்கு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர் அண்மையில் மரணமடைந்த நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டதாக அரசாங்கம் கூறி வருகிறது. ஆனால், இது தற்கொலையா அல்லது 87-89 காலப்பகுதியைப் போல அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளின் இலக்காக அவர் மாற்றப்பட்டாரா என்ற பலமான சந்தேகம் தமக்கு இருப்பதாக முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மோசடிக்கு நிதி அமைச்சின் அமைச்சரும் செயலாளருமே பொறுப்புக்கூற வேண்டும். ஆனால், உயர்மட்ட அதிகாரிகளைப் பாதுகாப்பதற்காக இந்தப் பழியை கீழ்நிலை அதிகாரிகள் மீது சுமத்த அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
அதிகாரிகளின் தலையில் பழியைப் போட்டுவிட்டு, அரசாங்கம் தனது கைகளைக் கழுவிக்கொள்ளப் பார்க்கிறது" என்று அவர் இதன்போது தெரிவித்துள்ளார். ஊழல்வாதிகளைப் பிடிப்போம், முறையான அமைப்பை உருவாக்குவோம் (System Change) என்று கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி, இன்று ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ளதாக அவர் விமர்சனம் செய்துள்ளார்.
நிலக்கரி மோசடி மற்றும் கன்டெய்னர் கடத்தல் போன்ற விவகாரங்களைப் போல, இந்த 2.5 மில்லியன் டொலர் மோசடியும் மூடிமறைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். அரசாங்கம் வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே, கொழும்பில் மே தினக் கூட்டங்களை நடத்த அஞ்சி, அரசாங்கத்தின் தலைவர்கள் தொலைதூரப் பகுதிகளுக்குச் சென்றுள்ளதாகவும், தொழிலாளர்கள் மற்றும் அரச ஊழியர்கள் படிப்படியாக இந்த அரசாங்கத்தை விட்டு விலகி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.