இலங்கை அரசியல் ஒரு சாக்கடை! மனம் திறந்த பிரபல பாடகர்
தன்னுடைய இசைப்பயணத்தை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையிலேயே, ஸ்ரீலங்கா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததாக இசைக்கலைஞரான இராஜ் வீரரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் யோஷித ராஜபக்ச தன்னை கன்னத்தில் அரைந்ததாக வெளியாகும் செய்தியையும் அவர் மறுத்துள்ளார்.
கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும், யூடியுயூப் தளமொன்றிற்கு வலைத்தளமொன்றில் இசைக்கலைஞரான இராஜ் வீரரத்ன நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.
பதவிகளிலிருந்து விலகி ஓய்வுபெற்று சுதந்திரமான தன்னுடைய இசைப்பயணத்தை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையிலேயே, இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததாக இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் பைத்தியக்காரத்தனமான செயற்பாடுகளுக்கு தன்னால் பொறுப்புக்கூற முடியாது எனவும், எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவார் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஆட்சி மாற்றம் தேவை என்ற சமூக அக்கறையுடன் செயற்பட்டதாகவும், ஆனால் தற்போதைய அரசாங்கம் கண்மூடித்தனமாக செயற்படுவதாகவும் இராஜ் குற்றம் சுமத்தியுள்ளதோடு, குறிப்பாக அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், மக்கள் அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை எனவும், கடுமையான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் எடுக்கின்ற சில தீர்மானங்கள் குறித்து நான் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், குறிப்பாக ஜனாதிபதி மேலும் கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தான் அரசியல்வாதியல்ல எனவும், ஜனாதிபதியுடன் சில விடயங்களில் இணைந்து செயற்பட்டதாகவும், மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் செய்யும் பைத்தியக்காரத்தனமான செயற்பாடுகளுக்கு நான் பொறுப்புக்கூற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்காவின் அரசியல் என்பது சாக்கடையான ஒரு விடயம். நினைத்த மாத்திரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதோடு, அதற்கு பல தலைமுறைகள் செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் யோஷித ராஜபக்ச தன்னை கன்னத்தில் அரைந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தன்னை யாரும் கன்னத்தில் அறையவில்லை எனவும் இது வெறும் வதந்தி எனவும் இராஜ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபைக்கு புதிய உறுப்பினர்களாக இராஜ் வீரரத்னவும், தெஹானி இமாராவும் கடந்த வருடம் ஸ்ரீலங்கா விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டிருந்தனர்.
எனினும், கடந்த 25ஆம் திகதி இராஜ் வீரரத்ன தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார். இது தொடர்பில் இராஜ் வீரரத்ன, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு கடிதமொன்றையும் அனுப்பியிருந்தார்.
அந்த கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எவ்வாறெனினும், ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் இராஜுக்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த முரண்பாட்டின் ஒரு கட்டமாக ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் யோஷித ராஜபக்ச தன்னை கன்னத்தில் அரைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



