பிரிவினைவாதத்தை தூண்டும் புலம்பெயர் அமைப்புகள்: வெளிவிவகார அமைச்சர் குற்றச்சாட்டு
பிரிவினைவாதத்தை தூண்ட சில புலம்பெயர் அமைப்புகள் முயற்சிப்பதாக வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (07.12.2023) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம்
புலம்பெயர் அமைப்புக்களிலும், சர்வதேச சமூகத்திலும் ஒரு சிலர் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிறார்கள். பிரிவினைவாதத்தை தாம் ஆதரிப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறான கொள்கையுடன் எம்மால் இணங்க முடியாது.
இஸ்ரேல் - காசா போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை இலங்கை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஊடாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் போரை விடுத்து பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதையே முழு உலகும் வலியுறுத்துகின்றது.நாங்களும் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளோம்.
தமிழ் தரப்பு பிரதிநிதிகள் பிரிவினைவாதம் பற்றி பேசுகின்றார்கள் என்று நான் குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.
பொருளாதார மீட்சி
நான் அவ்வாறு குறிப்பிடவில்லை.'புலம்பெயர் அமைப்புக்களிலும், சர்வதேச சமூகத்தில் ஒரு சிலரும் பிரிவினைவாதத்தை தூண்டி விடுகின்றார்கள்' என்றே குறிப்பிட்டேன்.
பொருளாதார மீட்சி தொடர்பில் அண்மையில் நாங்கள் புலம்பெயர் அமைப்புக்களுடனும்,சர்வதேச சமூகத்தினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.அப்போது பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பெண்மணி ஒருவர் பிரிவினைவாதம் பற்றி பேசினார்.
சமஷ்டி பற்றி பேசுவது பிரச்சினையில்லை ஐக்கிய நாட்டுக்குள் ஒரு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்பது எமது நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.