கோட்டாபயவின் கழுத்தில் மலர்வளையமே வைக்க வேண்டும்: விமல் வீரவங்ச எச்சரிக்கை
ரணில் டயஸ்போராக்களின் சிறந்த நண்பராக இருப்பதால் யுத்தத்தின் பின்னர் நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போன விடயங்களை நிறைவேற்றிக்கொள்ள டயஸ்போரா முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்கள் ஆணையை பெற்றுக்கொண்ட பொதுஜன பெரமுனவினர் காட்டிக்கொடுப்பு சட்டமூலத்துக்கு கையுயர்த்தினால் கோட்டாபயவின் கழுத்தில் மலர்வளையமே வைக்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று (17.01.2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம்
அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் நெருக்கடியை சந்தித்துள்ள சந்தர்ப்பத்தில், இதற்கு முன் நிறைவேற்ற எதிர்பார்த்திருந்த செயற்பாடுகளை தற்போதைய நிலைமையை சாதகமாக பயன்படுத்தி நிறைவேற்றிக் கொள்ளவே ரணில் விக்ரமசிங்க - பசில் ராஜபக்ச அரசாங்கம் முயற்சிக்கின்றது.
அதிலொரு முயற்சியாகவே இலங்கை உண்மை, சமாதானம் மற்றும் மறுசீரமைப்புக்கான ஆணைக்குழுவென்ற சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்கள். இந்த சட்டமூலத்தின் சாராம்சத்தை கவனத்தில் கொண்டால், இது மேலும் சில சட்டமூலங்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டதாக இருக்கிறது.
தேசிய சமத்துவம் மற்றும் மறுசீரமைப்புக்கான அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டம், 2018, 5ஆம் இலக்க வலிந்து காணாமலாக்கப்படுவதிலிருந்த சகலரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டம், காணாமலாக்கப்பட்டவர்களின் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களில் உள்ளடக்கமாகவே இந்த புதிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக, 2015ஆம் ஆண்டு அப்போதிருந்த வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட 30/1 யோசனைக்கு ஆதரவளித்திருந்தார். ரணில் அல்லது மைத்திரியின் அனுமதியுடனே அவர் அந்த யோசனைக்கு ஆதரவளித்திருந்தார். அந்த யோசனையில் போர் குற்றங்கள் தொடர்பில் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்ற விசாரணை குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசியலமைப்பின் பிரகாரம் சர்வதேச நீதிமன்றமொன்றை எமது நாட்டில் ஸ்தாபிக்க முடியாது என்பதால், அதன் பின்னரே இந்த சட்டமூலங்கள் கொண்டுவரப்படுகின்றன. இந்த பின்னணியிலேயே தற்போது இலங்கை உண்மை, சமாதானம் மற்றும் மறுசீரமைப்புக்கான ஆணைக்குழு சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ளது.
யுத்தக் குற்றம்
யுத்தக் குற்றம் தொடர்பில் இலங்கை இராணுவத்தில் இருந்த தற்போது இருக்கும் இராணுவ அதிகாரிகள் பலரின் பெயர்ப் பட்டியலை சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த பெயர்ப் பட்டியலின் அடிப்படையில் இந்த புதிய சட்டமூலத்தினூடாக குற்றச்சாட்டு முன்வைக்க முடியும்.
பொய்யான சாட்சிகளை முன்வைக்க முடியும். இதனூடாக அந்த செயற்பாடுகளை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும். அதனூடாக இதற்கு முன்னர் குறிப்பிட்டது போன்று யுத்தக் குற்றம் தொடர்பான நீதிமன்றத்துக்கு இந்த ஆணைக்குழுவில் முன்வைக்கப்படும் சகல சாட்சிகளும் அதிகாரப்பூர்வமான சாட்சிகளாக நிரூபிக்க முடியும்.
சரத்பொன்சேகா தவிர்ந்த இராணுவ அதிகாரிகள் பலர் மீது யுத்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்க முடியும். பொய் சாட்சிகளையும் உருவாக்க முடியும். வழக்கு விசாரித்து தண்டனை வழங்கவும் முடியும். தேவை ஏற்பட்டால் வெளிநாட்டு நீதிமன்றங்களினால் வழங்கப்படும் தீர்ப்புகளையும் இலங்கையில் நடைமுறைப்படுத்த வேண்டி ஏற்படும். இந்த வருடத்தில் ரணிலின் முதலாவது சட்டமூலம் இதுவாகும்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற போராட்டங்களை முடக்கியது முதல் சகல விடயங்களும் இந்த சட்டத்தை கொண்டுவருவதற்காகவே முன்னெடுக்கப்பட்டன. எமது இராணுவ பிரதானிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும் பொறிமுறைகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
எத்தனை சிக்கல்கள் இருந்தாலும் அதற்கு இடமளித்துவிட்டு பொறுமையாக இருந்தால் அல்லது இந்த காட்டிக்கொடுப்புக்கு இடமளித்தால் நாங்கள் மனிதர்களாக இருக்க முடியாது.
யுத்தத்தின் பின்னர் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல்போன நிலையில், தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி ரணில் டயஸ்போராக்களின் சிறந்த நண்பராக இருப்பதாலும் அந்த விடயங்களை நிறைவேற்றிக்கொள்ளவே டயஸ்போரா முயற்சிக்கிறது.
மீதமுள்ள சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே எமக்கு முழு படத்தையும் காணக்கூடியதாக இருக்கும். தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தினூடாகவே இதற்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட சகல சட்டங்களும் முறையாக நடைமுறைப்படுத்தப்படும்.
காட்டிக்கொடுப்பு சட்டமூலத்துக்கு கையுயர்த்தினால்
மக்கள் ஆணையை பெற்றுக்கொண்ட பொதுஜன பெரமுனவினர் இதுபோன்ற காட்டிக்கொடுப்பு சட்டமூலத்துக்கு கையுயர்த்தினால் கோட்டாவின் கழுத்தில் மலர்வளையமே வைக்கவேண்டும்.
இதற்கு கையுயர்த்தும் ஒவ்வொரு பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் சவேந்திர, கமல் குணரத்ன உள்ளிட்ட சகல இராணுவ அதிகாரிகளின் கழுத்துகளிலும் மலர்வளையம் வைக்கவேண்டிவரும்.
கட்டளையிட்டவர் என்ற அடிப்படையில் முப்படைத் தளபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவையும் காட்டிக்கொடுக்கும் நிலை ஏற்படும். தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவே இதுபோன்ற சூழ்ச்சிகளை செய்கிறார்கள். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கும் சார்பாக செயற்பட மாட்டோம்.
நாங்கள் சுயாதீனமாகவே செயற்படுவோம். எங்களின் சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவோம். எதிர்வரும் காலத்தில் அதனை அறிவிப்போம். தேசியவாத முற்போக்கு இடதுசாரிகள் முன்னணியாக நாங்கள் செயற்படுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |