ஊடகவியலாளர்களுக்கு எதிராக பிரதி சுகாதார அமைச்சர் சி.ஐ.டி.யில் முறைப்பாடு
சுகாதார சேவைகள் பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.
மருந்து இறக்குமதியாளர்களிடமிருந்து ஒருசில ஊடகவியலாளர்கள் மாதாந்த கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதாகவும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்றையதினம்(15) கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பிரதியமைச்சர் ஹங்சக விஜேமுனி,
“ஊடகவியலாளர்களாக செயற்படும் சிலர் சுகாதார அமைச்சின் தகவல்களைப் பெற்று அவற்றை மருந்து இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு வழங்குகின்றனர்.
முறைப்பாடு
சுகாதார அமைச்சில் இருந்து பெற்றுக் கொள்ளும் தகவல்கள் அவர்கள் வழியாக உடனுக்குடன் மருந்து இறக்குமதியாளர்களைச் சென்றடைகின்றது.
இவ்வாறான ஊடகவியலாளர்கள் சுகாதார அமைச்சின் நேர்மையான அதிகாரிகளை இலக்கு வைத்து போலியான செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
அதன் மூலம் சுகாதார அமைச்சின் செயற்பாடுகளுக்கு பாரிய தடங்கல் ஏற்படுகின்றது. எனவே அவ்வாறானவர்களைக் கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |