அவதானத்துடன் இருக்கவும்..! ஆட்பதிவுத்திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
ஆட்பதிவுத்திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆட்பதிவுத்திணைக்களம் அறிக்கையொன்றினை வெளியிட்டு பொதுமக்களை எச்சரித்துள்ளது.
தனிப்பட்ட விபரங்களை கோரி மோசடி
ஆட்பதிவுத் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கமான 115226126 என்பதனை போன்று தோற்றமளிக்கும் விதத்தில், +94115226126 மற்றும் +0115226126 ஆகிய இலக்கங்கள் ஊடாக தொடர்புகொள்ளும் சில தரப்பினர், பொதுமக்களின் தனிப்பட்ட விபரங்களை கோரி மோசடியில் ஈடுபடுகின்றமை தெரியவந்துள்ளது.

அத்துடன், வட்ஸ்அப் செய்திகள் ஊடாகவும் இவ்வாறான தகவல்கள் கோரப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரிகள் எவரும் பொதுமக்களுக்கு அழைப்புக்களை ஏற்படுத்தமாட்டார்கள் எனத் திணைக்களம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை
இவ்வாறான அழைப்புக்களுக்குப் பதிலளிப்பதையோ அல்லது உங்களது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதையோ முற்றாக தவிர்க்குமாறு ஆட்பதிவுத்திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தின் 011 5226100 எனும் இலக்கத்தையோ அல்லது www.drp.gov.lk எனும் இணையதளத்தையோ நாட முடியும் என அறிவித்துள்ளது.
பொதுமக்கள் இவ்வாறான போலி அழைப்புக்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு ஆட்பதிவுத்திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி.சூரியப்பெரும கேட்டுக்கொண்டுள்ளார்.