அமெரிக்க தளங்களை தாக்க ரஷ்யாவின் மறைமுக நகர்வுகள்.. ஈரானுக்கு இரகசியமாக உதவும் புடின்!
மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் மற்றும் அதன் நட்பு நாடுகளின் இராணுவத் தளங்கள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்த, ரஷ்யா தனது உளவுச் செயற்கைக்கோள் தரவுகளை ஈரானுடன் பகிர்ந்து வருவதாக உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
வெளியாகியுள்ள உளவுத்துறை அறிக்கையின்படி, கடந்த மார்ச் 21 முதல் 31 வரையிலான குறுகிய காலப்பகுதியில், ரஷ்ய செயற்கைக்கோள்கள் மத்திய கிழக்கின் 11 நாடுகளில் உள்ள 46 முக்கிய இடங்களை 24 தடவைகள் மிகத் துல்லியமாகப் படம் பிடித்துள்ளன.
இதில் அமெரிக்க இராணுவத் தளங்கள், விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் வயல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சவூதி அரேபியாவில் உள்ள 'கிங் காலித்' இராணுவ நகரை ரஷ்யா ஐந்து முறை கண்காணித்துள்ளது.
மிகத் துல்லியமான புகைப்படங்கள்..
அமெரிக்காவின் THAAD ஏவுகணை பாதுகாப்பு அமைப்பைக் கண்டறிவதே இதன் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யா படம் பிடித்த சில நாட்களிலேயே, அந்த இடங்கள் ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன.

இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையில், கண்காணிப்பு உலகளாவிய எரிபொருள் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியையும் ரஷ்ய செயற்கைக்கோள்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.
ஈரானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இதற்கென ஒரு நிரந்தரத் தகவல் தொடர்பு அலைவரிசை இருப்பதாகவும், ஈரானில் உள்ள ரஷ்ய இராணுவ உளவாளிகள் மூலம் இந்தத் தரவுகள் பரிமாறப்படுவதாகவும் உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
சதித்திட்டத்தில் இணைந்த ஹேக்கர்கள் (Cyber Attack) இராணுவ ரீதியான உதவி மட்டுமன்றி, சைபர் (Cyber) தளத்திலும் ரஷ்யாவும் ஈரானும் கைகோர்த்துள்ளன.
அமெரிக்காவுக்கு எதிரான அதிரடி தாக்குதல்கள்
இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளின் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகளை முடக்குவதற்கு இரு நாட்டு ஹேக்கர் குழுக்களும் இணைந்து செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யாவின் "Z-Pentest Alliance" மற்றும் ஈரானின் "Handala Hack" போன்ற குழுக்கள் தந்தி (Telegram) ஊடாகத் தகவல்களைப் பகிர்ந்து, இஸ்ரேலிய எரிசக்தி நிறுவனங்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானுக்கும் இடையே கையெழுத்தான 'முழுமையான மூலோபாய கூட்டாண்மை ஒப்பந்தத்தின்' (Comprehensive Strategic Partnership) ஒரு பகுதியாகவே இந்த உளவுத் தகவல் பரிமாற்றங்கள் பார்க்கப்படுகின்றன.
ஏற்கனவே உக்ரைன் போருக்காக ரஷ்யாவிற்கு ஈரான் 'ஷாஹெட்' (Shahed) ட்ரோன்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது அமெரிக்காவிற்கு எதிரான போரில் ஈரானுக்கு ரஷ்யா நேரடியாகத் தொழில்நுட்ப ரீதியில் முண்டு கொடுத்து வருவது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.