ஈரானுக்கு கடுமையான பொருளாதார அடி - மிகப்பெரிய இரசாயன ஆலை மீது இஸ்ரேல் சக்திவாய்ந்த தாக்குதல்
தென்மேற்கு ஈரானில் சிராஷ் நகரிலுள்ள மூன்றாவது மிகப்பெரிய இரசாயன ஆலையை தாக்கியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
ஈரானின் மிகப்பெரிய பெட்ரோலிய வளாகத்தின் மீது இஸ்ரேல் "சக்திவாய்ந்த தாக்குதலை" நடத்தியதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஏப்ரல் (6) நேற்று அறிவித்துள்ளார்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உற்பத்தி
குறித்த வளாகத்தில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உற்பத்திக்கு பயன்படுத்தும் நைட்ரிக் அமிலத்தை உற்பத்தி செய்யப்படுகின்றது.
"ஈரானின் பெட்ரோலிய இரசாயன உற்பத்தியில் சுமார் 50 சதவீதத்திற்குப் பொறுப்பான ஒரு முக்கிய இலக்கான, அசலூயேவில் அமைந்துள்ள ஈரானின் மிகப்பெரிய பெட்ரோலிய இரசாயன ஆலையின் மீது இராணுவம் ஒரு சக்திவாய்ந்த தாக்குதலை நடத்தியுள்ளது," என்று காணொளி அறிக்கையில் கூறியுள்ளார்.

"தற்போதைய நிலையில், ஈரானின் பெட்ரோலிய இரசாயன ஏற்றுமதியில் சுமார் 85 சதவீதப் பங்களிப்பைக் கொண்டுள்ள அந்த இரண்டு ஆலைகளும் செயல்பாட்டிலிருந்து நிறுத்தப்பட்டு, இனி இயங்காது," என்றும், இது "ஒரு கடுமையான பொருளாதார அடி" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் தேசிய பெட்ரோலிய இரசாயன நிறுவனம், தனது பார்ஸ் ஆலையில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.