ரஷ்யாவின் கஜானாவைக் குறிவைக்கும் உக்ரைன்: எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் சொந்த ஊரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு அருகே உள்ள உஸ்ட்-லுகா மற்றும் பிரிமோர்ஸ்க் ஆகிய இரு முக்கிய எண்ணெய் முனையங்கள் மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல்கள் ரஷ்யாவிற்கு பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த இரண்டு வாரங்களாக இந்த ஆலைகளில் பற்றி எரியும் மசகு எண்ணெய் மற்றும் இரசாயனங்களின் நெடி நகர் முழுவதும் பரவியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த இரு முனையங்களும் ரஷ்யாவின் கடல்வழி எண்ணெய் ஏற்றுமதியில் 40 சதவீதத்தைக் கையாள்பவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் நோக்கம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தி வரும் சூழலில், உலகளவில் மசகு எண்ணெய் விலை உயர்வால் ரஷ்யாவிற்கு கிடைக்கும் கூடுதல் இலாபத்தைத் தடுப்பதே உக்ரைனின் இந்தத் தாக்குதல்களின் முக்கிய நோக்கமாகும்.

உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள இந்த இலக்குகளைத் தாக்க உக்ரைன் 'Firepoint' நிறுவனத்தின் அதிநவீன FP-1 டிரோன்களைப் பயன்படுத்தியுள்ளது. இவை 120 கிலோ வெடிபொருட்களைச் சுமந்து கொண்டு 1,500 கி.மீ தூரம் வரை பாயும் திறன் கொண்டவை.
இந்தத் தாக்குதல்களால் ரஷ்யாவின் பால்டிக் கடல்வழி எண்ணெய் ஏற்றுமதி 2022-க்குப் பிறகு மிக மோசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளதுடன், இதுவரை சுமார் 1 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அத்துடன், ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தந்திரமாக முறியடித்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள், ரஷ்யாவின் போர் நிதியைக் காலி செய்யும் உக்ரைனின் புதிய உத்தியாகப் பார்க்கப்படுகிறது.
ரஷ்யத் தாக்குதல்களை நிறுத்த பேச்சுவார்த்தை
இந்தத் தாக்குதல்கள் ஒருபுறம் ரஷ்யாவைப் பாதித்தாலும், மறுபுறம் உலக சந்தையில் எண்ணெய் விலையை உயர்த்துவதால் அது ஈரானுக்குச் சாதகமாக முடிவதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி, இந்தத் தாக்குதல்களை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி, உக்ரைனின் மின் நிலையங்கள் மீதான ரஷ்யத் தாக்குதல்களை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இருப்பினும், இத்தகைய பொருளாதாரப் பாதிப்புகளுக்கு இடையிலும் போரை நிறுத்த புட்டின் முன்வருவதாகத் தெரியவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
"போர் என் வீட்டின் வாசலுக்கே வந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை" என செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், ரஷ்யாவின் பாதுகாப்புக் குறித்த சாமானிய மக்களின் அச்சத்தைப் பிரதிபலிக்கின்றன.