முல்லைத்தீவில் கமநல சேவைகள் திணைக்களம் ஒன்றின் செயற்பாடுகள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்
முல்லைத்தீவில் (Mullaitivu) கமநல சேவைகள் திணைக்களம் ஒன்றின் செயற்பாடுகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
விவசாய பயன்பாட்டுக்கென வழங்கப்பட்ட உழவியந்திரங்களை பயன்படுத்தாது கமநல சேவைகள் நிலையத்தில் வைத்துள்ளனர்.
அந்த உழவியந்திரங்களை பயன்படுத்த முடியாத அளவுக்கு அவை பராமரிப்பற்ற நிலையினால் சேதமடைந்துள்ளமை தொடர்பிலுமே இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
பெரும்போக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ள இன்றைய சூழலிலும் உழவியந்திரங்களை மீளவும் பயன்படுத்தக்கூடிய ஒரு முயற்சிக்கு அவர்கள் தயாராகிக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆறு உழவியந்திரங்கள்
முல்லைத்தீவு அளம்பிலில் கமநல சேவைகள் திணைக்களத்தில் ஆறு உழவியந்திரங்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
உழவியந்திரங்களை பயன்படுத்தி பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்காக நிலம் பண்படுத்தலை செய்து கொள்ள அவை வழங்கப்பட்டவில்லை.
அவற்றை விவசாயிகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கவோ அல்லது சுழற்சி முறைப் பயன்பாட்டடிப்படையில் வழங்கவோ முடிந்திருக்கும் போதும் அவ்வாறு நடந்திருக்கவில்லை என விவசாயிகளிடையே அதிருப்தி இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
பராமரிப்பற்ற நிலை
உழவியந்திரங்களை நிறுத்தி வைப்பதற்கென தனியான கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளதையும் உழவியந்திரங்களை அவ் கொட்டகைகளினுள் நிறுத்தி வைத்திருப்பதையும் இங்கு இணைக்கப்பட்ட படங்களில் அவதானிக்கலாம்.
உழவியத்திரத்தின் சில்லுகள் காற்றுப் போன நிலையில் இருக்கின்றன. அத்தோடு சில்லுகள் மற்றும் ஏனைய சில உதிரிப் பாகங்கள் சிதறிய சிலையில் கொட்டகையினுள்ளும் அதனைச் சூழவுள்ள இடங்களிலும் இருப்பதையும் உற்று நோக்க முடிந்தது.
உழவியந்திரங்கள் மீது தூசு படிந்திருப்பதோடு அவற்றின் இயந்திரப் பகுதிகளும் சேதமடைதல் நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.
அவற்றை கழுவி எண்ணெய் இட்டு சிறப்பாக பராமரிக்கலாம். அப்படி பேணும் போது அவை சேதமடைவதை தடுக்கலாம் என இது தொடர்பில் மேற்கொண்ட உரையாடலில் கலந்துகொண்டவர்கள் குறிப்பிட்டனர்.
பொறுப்பற்ற செயற்பாடு
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உழவியந்திரங்களை சீராக பராமரிப்பது கமநல சேவைகள் திணைக்களத்தின் பொறுப்பாகும்.
ஒவ்வொரு போகத்தின் போதும் உழவியந்திரங்களை உழுதல் உள்ளிட்ட விவசாய செயற்பாடுகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கியிருக்கலாம்.
அதன் மூலம் பெறப்படும் நிதியினைக்கொண்டு இயந்திரங்களை பராமரித்து தொடர்ந்து நீண்ட கால பயன்பாட்டை இதன் மூலம் உறுத்திப்படுத்தியிருக்காலம் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
விவசாயிகள் குறைந்த பயிரிட்டுச் செலவை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடிய இவ்வியந்திரங்கள் பயன்பாடற்ற நிலையில் இருப்பது தொடர்பில் பொருத்தமான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அந்த ஆய்வுகள் மூலம் எதிர்காலத்தில் தொடர்ச்சியான பராமரிப்பும் பயன்பாடும் நிகழ பொருத்தமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.