தெஹிவளை துப்பாக்கிச் சூடு: தப்பியோடிய சந்தேகநபர் கைது..! வெளிநாட்டு கும்பல் தொடர்பு அம்பலம்
தெஹிவளையில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தப்பிச் சென்ற சந்தேகநபர், மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், வெளிநாட்டில் வசித்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ஒருவரின் திட்டமிடலின் பேரிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தெஹிவளையில் அமைந்துள்ள நிசால சேவன வளாகத்தில் மயானக் காவலாளியாக பணியாற்றி வந்த சுமித் ரூபசேனாவை குறிவைத்து, கடந்த ஜூலை 19ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

9 மில்லிமீற்றர் துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், காவலாளியின் இடது கை மற்றும் மார்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
56 வயதான சுமித் ரூபசேனா, தெஹிவளை மீனவர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவரது மகன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மோட்டார் வாகன சாரதி கைது
துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற காட்சிகள் சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தன.
இதனையடுத்து, சம்பவம் இடம்பெற்று ஒரு வாரத்திற்குப் பின்னர், நேற்று (26) டெல்கந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளின் சாரதி மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அட்டிடியா பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேகநபரிடமிருந்து 7 கிராம் 200 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், நிசால சேவன மயானக் காவலாளி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, வெளிநாட்டில் வசித்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் ஒருவரின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தக் குற்றத்தைச் செய்வதற்காக சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட 255,000 ரூபாய் பணம் மற்றும் மூன்று கைப்பேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கு மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.