நேரடி வெளிநாட்டு முதலீடுகள் குறைவடைந்து வருவது நாட்டுக்குப் பாரிய ஆபத்து: சஜித் எச்சரிக்கை
வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வரும் நாட்டில் உயர் பொருளாதார வளர்ச்சியைப் பேணுவதற்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மிக அவசியமானவை எனவும், எனினும் நாட்டின் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் குறைவடைந்து வருவது பாரிய பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரச் சூழல் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள தரவுகளைச் சுட்டிக்காட்டியே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "2025 ஆம் ஆண்டில் இலங்கையின் நேரடி வெளிநாட்டு முதலீட்டுத் தொகையுடன் ஒப்பிடும்போது, பங்களாதேஷுக்கு 1.7 மடங்கும், பாகிஸ்தானுக்கு 1.8 மடங்கும், மலேசியாவுக்கு 14.7 மடங்கும், தாய்லாந்துக்கு 18.3 மடங்கும், வியட்நாமுக்கு 19.5 மடங்கும், இந்தோனேசியாவுக்கு 20.5 மடங்கும் மற்றும் இந்தியாவுக்கு 37.3 மடங்கும் முதலீடுகள் கிடைத்துள்ளன.இதன் மூலம் நமது நாட்டின் முதலீட்டு நிலை பலவீனமான மட்டத்தில் உள்ளமை தெளிவாகின்றது.
உடனடி தீர்வு
சட்ட ரீதியான நிச்சயமற்ற தன்மைகள், திட்டங்களைச் செயற்படுத்துவதில் உரிய அவசரப் பதிலளிப்புகள் கிடைக்காமை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினைகள், ஒழுங்குமுறைகளில் காணப்படும் ஸ்திரமற்ற தன்மை ஆகியவையே முதலீடுகள் குறைவடைவதற்கான காரணங்களாக விளங்குகின்றன.

நாட்டின் உள்நாட்டு மோதல்கள் மற்றும் மத்திய கிழக்குப் போர் நிலவிய சவாலான காலகட்டத்தில்கூட, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ 200 ஆடைத் தொழிற்சாலைகள் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இலட்சக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்தார்.
அதிகாரிகள் வாதங்களை ஒதுக்கிவிட்டு முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும். எனவே, இந்தப் பிரச்சினைகளுக்குத் உடனடியாகத் தீர்வு காணும் வகையில், ஜனாதிபதி தலைமையில் துரித செயலணி ஒன்றை நியமித்து, முதலீடுகளைக் கவருவதற்கான அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.