ஒதுக்கீட்டு பிரதேச பயிர்செய்கைகளை அழிப்பதற்கு தீர்மானம்!
திணைக்களங்களுக்கு சொந்தமான ஒதுக்கீட்டு பிரதேசங்களை ஆக்கிரமித்து இம்முறை பயிர்செய்கை மேற்கொள்ளப்படுமாக இருந்தால் அவற்றை அழிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளளார் .
இவ்வாண்டு இரணைமடுக்குளத்தின் கீழான பெரும்போக பயிர்செய்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இரசாயன பசளைகள்
அவர் தொடர்ந்தும் கூறுகையில், “இந்த போகத்தின் போது எழுபது வீதமான இரசாயன பசளைகளை
வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரம் சேதனப்
பசளைகளையும் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் .
விவசாய அமைப்புகளை பதிவு செய்கின்ற பொறுப்புகள், அதிகாரம் என்பன கமநல சேவை திணைக்களத்திற்கே உரித்தானது. அத்துடன் நிதி செலவிடுதல், நிதிகளை கையாளுதல், வைப்பிலிடுதல் போன்ற நடவடிக்கைகளை கண்காணிக்கின்ற பொறுப்பும் மேற்படி திணைக்களத்திற்கே உள்ளது.
விவசாய அமைப்புகளின் நிதி மோசடிகள் தொடர்பில் விவசாயிகளிடமிருந்து ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைவாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
சிறுபோக பயிர்செய்கை
சிறுபோக பயிர்செய்கையை நிறைவு செய்தவர்களாக காலபோக செய்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.
அதற்கமைவாக விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான எரிபொருள் விநியோகிக்கப்பட்டு
வருகின்றது.
அதே நேரம் விவசாயிகளுக்கு தேவையான உரத்தையும் முழுமையாக வழங்குவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடந்த போகத்தில் பல்வேறு சிரமங்கள், இடர்பாடுகள் இருந்தன. அதாவது கடந்த போகங்களில் சேதன உரங்களை பயன்படுத்தியமையால் உற்பத்தி குறைந்துள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
இம்முறை திணைக்களங்களுக்கு சொந்தமான ஒதுக்கீட்டு
பிரதேசங்களை ஆக்கிரமித்து பயிர்செய்கை மேற்கொள்ளப்படுமாக இருந்தால்
அவற்றை அழிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என
குறிப்பிட்டுள்ளார்.



