உட்கொள்ளும் அரிசியின் அளவை குறைப்பது நல்லது..! லால் காந்தவின் அறிவுரை
நாம் உட்கொள்ளும் அரிசியின் அளவை மூன்றில் ஒரு பங்கு குறைப்பது நல்லது என விவசாய அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
கன்னொருவவில் உள்ள தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பு மையத்தில் இடம்பெற்ற நெல் சாகுபடியை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“2024-2025 பருவத்தில், நாங்கள் அரிசியை கணிசமான அளவு இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. முதலில், அரிசி இறக்குமதி செய்வதை நிறுத்த விரும்புகிறோம்.
உடல் பருமன்
அரிசியை ஒரு முக்கிய ஏற்றுமதி பயிராக மாற்றுவது எப்படி என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம் அதிகமாக அரிசியை உட்கொள்கின்றோம். அரிசியின் அளவை மூன்றில் ஒரு பங்கு குறைக்க முடியும் என நான் நினைக்கிறேன்.
நமது உணவு கலாச்சாரம் தரம் சார்ந்ததாக இருக்க வேண்டும். ஒரு மரத்திற்குத் தேவையான அளவு தண்ணீர் தேவைப்படுவது போல, நமது உடலுக்கு தேவையான உணவுக்கும் அளவு தேவை.
உடல் பருமன் இன்று ஒரு கடுமையான சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளது. விவசாய அமைச்சகமும் சுகாதார அமைச்சகமும் இணைந்து இது குறித்து ஒரு விவாதத்தை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



