டேன் பிரியசாத்தின் கொலை.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள் - தப்பியோடிய இராணுவ வீரருக்கும் தொடர்பு!
மொட்டுக் கட்சியின் கொலன்னாவ நகர சபை வேட்பாளராக இருந்த டேன் பிரியசாத்தின் கொலையுடன் முன்னாள் இராணுவ வீரர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
முத்துக்கள் மற்றும் சட்டவிரோத சிகரட்டுகள் கடத்தல் தொடர்பாக கேகாலை பிரிவு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் நேற்று(18.09.2025) நடத்திய விசாரணையின் போதே அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, கடத்தல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தப்பியோடிய இராணுவ வீரர்
குறித்த பெண்ணிடம் 400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் இருந்ததாகவும் மற்றொரு சந்தேகநபரான தொழிலதிபர் ஒருவரிடம் ஐந்து இரத்தினக் கற்கள் மற்றும் 12,400 ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத சிகரெட்டுகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்றாவது நபர் பீரங்கி படையணியைச் சேர்ந்தவரும் அங்கிருந்து தப்பியோடியவருமான முன்னாள் இராணுவ வீரர் ஆவார்.
குறித்த நபரை நீண்ட நேரம் விசாரித்ததில் அவர் ஒரு பாதாள உலகக் கொலையாளி என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், டேன் பிரியசாத்தின் கொலையுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாலும் கண்டறியப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பாதாள உலகக் குற்றவாளி
வெளிநாட்டு பாதாள உலகக் குற்றவாளி ஒருவரிடமிருந்து பெறப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கொலன்னாவை, சாலமுல்லமுல்லவில் உள்ள வீட்டு வளாகத்தில் வைத்து டேன் பிரியசாத் சுடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மஹாபா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து அந்த வீட்டின் உரிமையாளரையும் இவர் சுட்டுக் கொன்றுள்ளார்.
இந்நிலையில், சந்தேகநபர்களை கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



