ஹோர்முஸ் நீரிணையில் ஜப்பானியக் கப்பல்களுக்கு அனுமதி: ஈரான் அதிரடி அறிவிப்பு
ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணிக்கு இடையே போர் நீடித்து வரும் சூழலில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு மிக முக்கியமான இடமான ஹோர்முஸ் நீரிணையை ஜப்பானியக் கப்பல்கள் கடந்து செல்ல அனுமதிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி, பேட்டியொன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
4 நாடுகளுக்கு அனுமதி
தங்களது எதிரி நாடுகளுக்கும் தங்களைத் தாக்கும் நாடுகளுக்கும் மட்டுமே இந்த நீரிணை மூடப்பட்டுள்ளதாகவும், மற்ற நாடுகளின் கப்பல்கள் தகுந்த ஒருங்கிணைப்புடன் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தனது மசகு எண்ணெய் தேவையில் 90 சதவீதத்திற்கும் மேலாக இந்த வழித்தடத்தையே நம்பியுள்ள நிலையில், ஈரானின் இந்த முடிவு ஜப்பானுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. ஈரான் தற்போது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தடையை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதன்படி, இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஜப்பானும் இந்தச் சலுகையைப் பெற்றுள்ளது.

ஈரானியப் புரட்சிகரக் காவல் படை இதற்கென ஒரு புதிய சரிபார்ப்பு மற்றும் பதிவு முறையை உருவாக்கி வருவதாகவும், இதன் மூலம் கப்பல்களின் உரிமையாளர்கள் மற்றும் சரக்கு விவரங்களை முன்கூட்டியே சமர்ப்பித்து அனுமதி பெற்றுச் செல்லலாம் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜப்பானியப் பிரதமர் சனாயே தகாயிச்சியிடம் போர்க்கப்பல்களை அனுப்பி நீரிணையைத் திறக்க உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ஈரானின் இந்த நேரடி இராஜதந்திர நகர்வு சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவிற்குள் நுழைந்த யுத்தம்! டியாகோ கார்சியா தீவில் பல்லிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்கள் - ஈரான் அதிரடி