பெண் பொலிஸ் அதிகாரியின் மகள் துஷ்பிரயோகம்-விசாரணைக்கு உத்தரவிட்ட பொலிஸ் மா அதிபர்
கந்தானை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரியின் 12 வயதான மகளை, அந்த பெண் பொலிஸ் அதிகாரி தொடர்பு வைத்திருந்த நபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
சம்பவம் தொடர்பான பொலிஸ் மா அதிபரின் சிறப்பு உத்தரவின் பேரில் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் ஊடாக விரிவான விசாரணைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கணவன் சிறைக்கு சென்ற பின் வர்த்தகருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட பெண் பொலிஸ் அதிகாரி
கந்தானை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரியாக பெண் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கடமையாற்றி வருகிறார். அவரது கணவர் சிறைச்சாலை பொறுப்பதிகாரி என்பதுடன் ஹெரோயின் வர்த்தகம் சம்பந்தமான குற்றச்சாட்டில் அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கணவர் சிறைக்கு சென்ற பின்னர், பெண் பொலிஸ் அதிகாரி, வர்த்தகர் ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். இந்த வர்த்தகர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் பெண் பொலிஸ் அதிகாரி ஜா-எலயில் வீடொன்றில வசித்து வந்துள்ளார்.
இந்த வீட்டில் வைத்தே பெண் பொலிஸ் அதிகாரியின் மகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேக நபர் சிறுமியை சில காலமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ள நிலையில், பெண் பொலிஸ் அதிகாரி சந்தேக நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியையும் மற்றைய மகளையும் தும்மல்சூரியவில் உள்ள தனது தாயாரின் வீட்டில் தங்கவைத்துள்ளார்.
பொலிஸாரிடம் நடந்தவற்றை கூறிய சிறுமி
இதனிடையே பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக தும்மலசூரிய பொலிஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் தொலைபேசி வாயிலாக முறைப்பாடு கிடைத்துள்ளது.
இந்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் வீட்டுக்கு சென்று சிறுமியை சந்தித்துள்ளனர். பொலிஸ் விடயங்களை விசாரித்த போது சிறுமி தனக்கு நடந்தவற்றை கூறியுள்ளார்.
இதனையடுத்து சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆரம்ப விசாரணைகளில் வெளியாகியுள்ள தகவல்களுக்கு அமைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபருக்கு மாத்திரமல்லாது மகளுக்கு நேர்ந்த பாலியல் குற்றத்தை மறைக்க முயற்சித்த பெண் பொலிஸ் அதிகாரிக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.