பாதுக்க பகுதியில் சிறுமி துஷ்பிரயோகம் - ஐந்து இளைஞர்கள் கைது
பாதுக்க, பின்னவல பிரதேசத்தில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சிறுமி சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக பாதுக்க பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி நேற்று முன்தினம் பாதுக்க பொலிஸில் சம்பவம் தொடர்பில் சிறுமியும், அவரது தாயும் முறைப்பாடு செய்துள்ளனர்.
இளைஞர்களிடம் விசாரணை
சிறுமியின் வாக்குமூலத்தின்படி சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஐந்து இளைஞர்களிடம் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 19, 20, 22 மற்றும் 27 வயதுடையவர்கள். துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் வயது 14 என பொலிஸார் தெரிவித்தனர்.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய காதலன்
சம்பவம் தொடர்பில் மேலும் விளக்கமளித்த பாதுக்க பொலிஸார், குறித்த சிறுமி காதல் உறவில் ஈடுபட்ட இளைஞனுடன் வந்திருந்ததாகவும், அவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை ஆரம்ப விசாரணைகளின் போது தெரியவந்ததாகவும், பின்னர் அவரது நண்பர்கள் சிலரும் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
கடந்த 3ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சிறுமியை அவிசாவளை சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.