17 வருட ஏக்கத்திற்கு இன்று முடிவு கட்டுமா றோயல் செலஞ்சர்ஸ்..!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன.
இரு அணிகளுக்கும் இடையேயான இன்றைய போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.
7 லீக் போட்டிகளின் முடிவில் பெங்களூர், லக்னோ, பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு..
இந்நிலையில், இன்றைய லீக் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம், தொடரின் 8வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும்.
ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 21 முறையும், பெங்களூர் அணி 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
குறிப்பாக ஐபிஎல் வரலாற்றின் முதல் தொடரான 2008ஆம் ஆண்டு நடைபெற்ற லீக் போட்டியில் பெற்ற வெற்றிக்கும் பிறகு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூர் அணி ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை.
இதனால், 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் பெங்களூர் அணி மீண்டும் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை அணியின் பந்துவீச்சு
சென்னை அணியில் தலைசிறந்த மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பது ஆர் சி பி அணியினருக்கு பாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர் சி பி அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக், சிஎஸ்கேயின் சுழற்பந்துவீச்சு அபாயத்தை எதிர்கொள்ள விராட் கோலி ஒருவரே போதும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றிபெற்று அசத்தியது.
அணியின் துடுப்பாட்டத்தில் ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
அவர்களுடன் ஷிவம் தூபே, ராகுல் திரிபாதி, ரவீந்திர ஜடேஜா, தீபக் ஹூடா உள்ளிட்டோரும் பிரகாசிக்கும் பட்சத்தில் அது எதிரணிக்கு கடும் சவாலாக அமையும்.
அணியின் பந்துவீச்சைப் பொறுத்த மட்டில் கலீல் அஹ்மத் உடன் சென்னை மைதானத்திற்கு ஏற்ப பந்துவீச கூடிய ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் நூர் அஹ்மத் ஆகியோர் அணியின் பலமாக பார்க்கப்படுகின்றனர்.
இதுதவிர, கடந்த போட்டியில் இடம்பிடிக்காத மதீஷா பதிரானா இப்போட்டிக்கான பதினொருவர் அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர்கள்
ராதன் படிதர் தலைமையிலான ஆர்சிபி அணியும் கொல்கத்தாவிற்கு எதிரான முதல் போட்டியில் வெற்றிபெற்ற கையுடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது.
முதல் போட்டியிலேயே அணியின் நட்சத்திர வீரர்கள் பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர்.
ரஜத் படிதார், லியாம் லிவிங்ஸ்டோன், டிம் டேவிட் போன்ற அதிரடியான வீரர்களும் அணியில் இருப்பது அணிக்கு பெரும் சாதகமாக பார்க்கப்படுகிறது.
மறுபக்கம் பந்துவீச்சு துறையில் ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள், ராஷிக் சலாம் உள்ளிட்டார் வேகப்பந்து வீச்சில் அணிக்கு கைகொடுக்கும் நிலையில், குர்னால் பாண்டியா, சுயாஷ் சர்மா மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் சுழற்பந்துவீச்சில் உதவுகின்றனர்.
இவர்களுடன் புவனேஷ்வர் குமாரும் அணியில் இடம்பெறும் பட்சத்தில் அந்த அணியின் பந்துவீச்சு துறை மேலும் வலிமை பெறும்.
சென்னை சேப்பாக்கம் மைதானம்
சென்னை சேப்பாக்கம் மைதானம் பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்களை விட சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது.
மேலும், சமீபத்திய ஆண்டுகளில், இது மிகவும் மெதுவாகவும், இரு வேகத்திலும், குறைந்த ஸ்கோர் கொண்ட பக்கமாகவும் உள்ளது.
2024 தொடரில் இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் சுமார் 170 ஆக இருந்தது. இது ஓட்ட எண்ணிக்கையை துரத்தி வெற்றியை எளிதாக்க வாய்ப்பளிக்கும்.
எனினும், சென்னை அணியின் துடுப்பாட்டம் குறித்து இரசிகர்களிடையே பரவலான விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
குறிப்பாக, ஏனையை அணிகளை விட துடுப்பாட்ட வரிசை பலம் மிக்கதாக இருந்தாலும் அணியின் வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தவறுவதோடு, ஏனைய அணிகளின் ஓட்ட சாசரியுடன் ஒப்பிடும் போது சிஎஸ்கே இன்னமும் பலவீனமான நிலையில் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
அந்தவகையில் இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும் போது இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு என்பது பெரும் எதிர்பார்ப்பாகவே உள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
