உலகச் சந்தையில் திடீர் சரிவை கண்ட கச்சா எண்ணெய் விலை - ஈரானின் அதிரடி முடிவால் ஏற்பட்ட மாற்றம்
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான இராணுவப் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகச் சந்தையில் தொடர் உயர்வை சந்தித்த கச்சா எண்ணெய் விலை தற்போது சரிவை கண்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பானது, நேற்றைய தினத்துடன் ஒப்பிட்டு இன்று(12.09.2026) வெளியிடப்பட்டுள்ளது.
உலகச் சந்தையின் முக்கிய எண்ணெய் விலைக் குறியீடான ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை, நேற்றைய நிலவரப்படி, 108 அமெரிக்க டொலர் என்ற அளவைத் தாண்டியிருந்தது.
இந்த நிலையில், தற்போது 104.61 அமெரிக்க டொலாராக குறைந்துள்ளது. இதேவேளை, ஒரு பீப்பாய் அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெயின் விலையும், நேற்றைய தினம் 103.34 அமெரிக்க டொலராகப் பதிவான நிலையில் இருந்து, இன்று(12) 100.05 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.
உலகச் சந்தையில் குறைந்த கச்சா எண்ணெய் விலை
மேலும், ஒரு பீப்பாய் முர்பான் கச்சா எண்ணெயின் விலையும், நேற்று 122.48 அமெரிக்க டொலராக இருந்த நிலையில் இருந்து, இன்று 119.46 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.

கிட்டத்தட்ட ஒரு வாரமாக நீடித்துவரும் இராணுவச் சூழல் தீவிரமடைந்து வந்தபோதிலும், ஹோர்முஸ் நீரிணை குறித்து விவாதிப்பதற்காக ஈரானிய அதிகாரிகள் குழு ஒன்று ஓமானுக்குப் புறப்படுவதாக ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியே கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
பல வளைகுடா நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த முக்கிய விவாதங்களில் கலந்துகொள்ள உள்ளனர்.