கடும் சிக்கலில் நாமல்: சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அதிரடி தீர்மானம்
எயார் பஸ் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேக நபராக பெயரிடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் சம்பவம் தொடர்பாக, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் நாமலையும் சந்தேக நபராக பெயரிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் தீர்மானம்
சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, இந்த வழக்கின் முதன்மை சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ள கபில சந்திரசேன பெற்ற இலஞ்சப் பணம் நாமல் ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்தே அவரை சந்தேகநபராக சேர்க்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் பணித்துள்ளது.
இதற்கமைய, நீதிமன்றில் நகர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு நாமல் ராஜபக்ச இந்த வழக்கிலும் சந்தேகநபராக பெயரிடப்படவுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான கொள்முதல் நடவடிக்கையின் போது 2014–2015 ஆம் காலப்பகுதியில் பல சந்தர்ப்பங்களில் 100 இலட்சம் ரூபாவை (10 மில்லியன்) லஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவால் கடந்த 04 ஆம் திகதி நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்து, அவர் வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri