அனுமதியின்றி கோயிலுக்குள் நடந்த தொல்லியல் அகழ்வாராய்ச்சி - பட்டப்பகலில் மூவர் கைது
தொல்லியல் அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில் கோயில் வளாகத்தில் உள்ள கல் ஒன்றிற்கு அருகே அகழ்வாராய்ச்சி செய்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம், புலத்சிங்கள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்தலேகம, ஹிங்குரகந்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகழ்வாராய்ச்சி போர்வையில் மோசடியாளர்கள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஹிங்குரகந்த பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் அகழ்வாராய்ச்சி இடம்பெறுவதாக புலத்சிங்கள பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்திய உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புலத்சிங்கள மற்றும் ஹொரணை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களுக்கு 35 முதல் 50 வயது இருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள், மத்துகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.