மத - இனத்தால் மக்களைப் பிரிக்க மாட்டோம்..! NPP சார்பில் சுந்தரலிங்கம் பிரதீப் உறுதி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மதங்களையோ, இனங்களையோ அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்யாது, மாறாக அனைத்து மதங்களையும் இனங்களையும் சமமாக மதிக்கும் அரசாங்கமாகவே செயற்படுகின்றது என பெருந்தோட்டத்துறை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
சபரிமலை யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கான விழிப்புணர்வு மாநாடு நேற்று(22.11.2026) ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய கஜலக்ஷ்மி மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
அகில இலங்கை மலையக ஐயப்ப சாமிகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், பெருந்தோட்டத்துறை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
புனித யாத்திரையாக பிரகடனம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையிலிருந்து சுமார் 50 வருடங்களாக ஐயப்ப பக்தர்கள் சபரிமலை யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த யாத்திரையை புனித யாத்திரையாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்த போதிலும், கடந்தகால அரசாங்கங்களால் அது நிறைவேற்றப்படவில்லை.
எனினும், எமது அரசாங்கம் இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து செயற்படும் அரசாங்கமாகும். இதன் காரணமாகவே புத்தசாசன அமைச்சர் சுனில் செனவி, சபரிமலை யாத்திரையைப் புனித யாத்திரையாகப் பிரகடனப்படுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தபோது அதற்கு எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொண்டு புனித யாத்திரையாகப் பிரகடனப்படுத்தி அதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டார். உலகிலேயே சபரிமலை யாத்திரையைப் புனித யாத்திரையாகப் பிரகடனப்படுத்திய ஒரே நாடு இலங்கையாகும்.
இந்தியாவில் கூட இதுவரையில் இவ்வாறான பிரகடனம் மேற்கொள்ளப்படவில்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மதத்துறையில் முன்னெடுத்த முதலாவது முக்கிய நடவடிக்கை இதுவாகும் என்றும் என்றார்.

இதனைத் தொடர்ந்து, சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சவால்கள் தொடர்பாகவும் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, யாத்திரைக்கான பயண ஏற்பாடுகள், விசா பெற்றுக்கொள்ளுதல், விமானப் பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் யாத்திரைக் காலத்தில் பாதுகாப்பான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுதல் தொடர்பில் துறைசார்ந்த நிபுணர்களால் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
இதன்போது அகில இலங்கை மலையக ஐயப்ப சாமிகளின் ஒன்றியத்தின் கீதம் பிரதி அமைச்சரால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கண்டி இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் சரண்யா, அகில இலங்கை மலையக ஐயப்ப சாமிகளின் ஒன்றியத்தின் தலைவர் சண்முகராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டதுடன், நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஐயப்ப குருமார் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.
