EPDP கொலைகள் அம்பலம்! - அடுத்து சிக்கப்போவது யார்! அரியநேந்திரன் உடைக்கும் உண்மைகள்
மட்டக்களப்பில் 2008ஆம் ஆண்டு சுரேஷ்குமார் என்பவர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஈ.பி.டி.பி. அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப் பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை, ஏனைய ஆயுதக் குழுக்களுக்கும் எச்சரிக்கையாக அமையும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
நேர்காணலொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறிப்பிட்ட அவர்,
18 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை முக்கியமான விடயம் எனக் குறிப்பிட்ட அவர், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வந்ததாகவும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற கடத்தல்கள், காணாமலாக்கப்படுதல் மற்றும் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும், இவ்வாறான சம்பவங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்தத் தீர்ப்பின் மூலம் இலங்கை நீதித்துறை மீது தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுமா என்பதைத் தீர்மானிக்க முடியாது எனவும், ஏனைய பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைச் சம்பவங்களுக்கான வழக்குகளிலும் நீதியான தீர்ப்புகள் வழங்கப்படுகின்றனவா என்பதைப் பொறுத்தே அதனை மதிப்பிட முடியும் எனவும் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் படுகொலை, செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இனப்படுகொலை மற்றும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச விசாரணைகளும் சர்வதேச நீதிமன்ற நடவடிக்கைகளும் அவசியம் எனக் குறிப்பிட்டார்.
அதேவேளை, இந்தத் தீர்ப்பு ஏனைய ஆயுதக் குழுக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் எனத் தெரிவித்த அவர், கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் படுகொலைகள் தொடர்பான வழக்குகளும் மீண்டும் விசாரிக்கப்பட்டு, ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கிழக்கில் நேரடியான அச்சுறுத்தல்கள் குறைந்திருந்தாலும், தொலைபேசி மூலமான மறைமுக அச்சுறுத்தல்களும் ஊடகவியலாளர்கள் மீதான அழுத்தங்களும் தொடர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.