மாணவியை பாலியல் சீண்டல் செய்த பூசாரி! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
2011ஆம் ஆண்டு இடம்பெற்ற மாணவி மீதான பாலியல் சீண்டல் வழக்கில் குற்றவாளியான கோவில் பூசாரிக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
17 வயதுடைய குறித்த மாணவி, போரினால் இடம்பெயர்ந்த நிலையில் கல்வியைத் தொடர்வதற்காக பூசாரியின் வீட்டில் தங்கியிருந்தபோது, 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை வெளியே தெரிவித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மாணவியை அச்சுறுத்தியதாகவும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவப் பரிசோதனை
பின்னர் மாணவி கர்ப்பமடைந்தமை மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்ததைத் தொடர்ந்து சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
மேலும், மேற்கொள்ளப்பட்ட DNA பரிசோதனையில் பிறந்த குழந்தைக்கு குறித்த பூசாரியே உயிரியல் ரீதியான தந்தை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா மேல் நீதிமன்றம் முன்னதாக குறித்த பூசாரிக்கு 17 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்திருந்த நிலையில், அதற்கு எதிராக அவர் மேன்முறையீடு செய்திருந்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றவியல் தீர்ப்பை உறுதிப்படுத்தியதுடன், தண்டனையை 17 ஆண்டுகளிலிருந்து 13 ஆண்டுகளாகக் குறைத்துள்ளது.
சிறைத்தண்டனை
அத்துடன், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.3 இலட்சம் இழப்பீடு வழங்கவும், ரூ.5,000 அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இழப்பீடு அல்லது அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலதிக சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலையும் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு இடம்பெற்ற குற்றத்திற்கு நீண்ட காலத்தின் பின்னர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், குற்றவாளியின் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு 13 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.