செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: விசாரணை மூடிமறைக்கப்படாது என நீதியமைச்சர் உறுதி
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் தொல்பொருள் ஆய்வு அறிக்கையால் திசைதிருப்பப்படாது என்றும், விஞ்ஞான மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான விசாரணையின் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி புதைகுழியில் பல கட்டங்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது சுமார் 574 பேரின் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையில் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அகழ்வுப் பணிகள்
யாழ்ப்பாணம் நீதவான், பல்வேறு தரப்புகளின் சட்டத்தரணிகள், சட்ட வைத்திய அதிகாரிகள் (JMO), குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் (CID), தடயவியல் பொலிஸார் மற்றும் காணாமல் போனோர் அலுவலகத்தின் (OMP) பிரதிநிதிகள் முன்னிலையில் இந்தப் பணிகள் இடம்பெற்றன.

எனினும், பேராசிரியர் ராஜ் சோமதேவ தனது இடைக்கால அறிக்கையில், தொற்றுநோய் அல்லது இயற்கை அனர்த்தம் காரணமாக மனித உடல்கள் விரைவாகவும் ஒழுங்கற்ற முறையிலும் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக்கூறை முன்வைத்திருந்தார்.
இந்தக் கருத்து, விசாரணைகள் மூடிமறைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டும் சில தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், சோமதேவவின் அறிக்கை ஒரு தடயவியல் தொல்பொருள் ஆய்வு அறிக்கையாகும். மனித எச்சங்கள் எங்கு, எவ்வாறு, எந்தத் தொல்பொருள் சூழ்நிலையில் புதைக்கப்பட்டன என்பதை அது விளக்குகிறது. இது சட்ட வைத்திய அறிக்கை அல்ல. மரணத்திற்கான காரணம் மற்றும் மரணித்த விதம் தொடர்பில் சட்ட வைத்தியப் பரிசோதனைகள் மூலமே ஆராயப்படும் எனத் தெரிவித்தார்.
மருத்துவப் பரிசோதனை முன்னெடுப்பு
யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரியும் அவரது குழுவினரும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மருத்துவப் பரிசோதனைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சோமதேவவின் அறிக்கை மட்டுமே நீதிமன்றம் பரிசீலிக்கும் ஒரேயொரு அறிக்கை அல்ல என்றும், ஏனைய நிபுணர்களின் அறிக்கைகளும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் இதுவரை இணக்கம் தெரிவிக்கவில்லை என்றாலும், குறிப்பாக மரபணு (DNA) பரிசோதனைகள் மற்றும் மனித எச்சங்களை அடையாளம் காண்பதற்காக சர்வதேச தொழில்நுட்ப மற்றும் தடயவியல் உதவிகளைப் பெற்றுக்கொள்ள இணங்கியுள்ளதாகவும் கூறினார்.
இறுதியாக, இந்த விசாரணைகளில் இனம், மதம், சாதி ஆகியவற்றுக்கு எந்தவிதமான இடமும் கிடையாது எனவும் அமைச்சர் வலியுறுத்தினார். “எங்களுக்கு உண்மையைக் கண்டறிய வேண்டும். எங்களுக்கு நீதி வேண்டும். அது முறையான, ஆதாரங்களின் அடிப்படையிலான விஞ்ஞான விசாரணையின் மூலமே கிடைக்க வேண்டும்” என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.