ஐரோப்பிய நாடுகளில் தலைமறைவாகியுள்ள இலங்கை குற்றவாளிகள்
கைதிகள் பரிமாற்றத்தை சில நாடுகளுடன் இணைந்து மேற்கொள்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நடவடிக்கையை விரைவுபடுத்தவுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சினால் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த உடன்படிக்கையின் ஊடாக வெளிநாடுகளில் கைது செய்யப்படும், நாட்டில் தேடப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படுமெனவும் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.
கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை
தற்போது சில நாடுகளுடன் இணைந்து அத்தகைய உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் மேலும் சில நாடுகளுடன் இணைந்து விரைவில் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கைகளில் கைச்சாத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய பிரபல வர்த்தகர்கள் 42 பேர் தற்போது வௌிநாடுகளில் தலைமறைவாகியுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் துபாயில் வசித்து வரும் நிலையில், ஏனையோர் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தலைமறைவாகியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, இவர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக புலனாய்வுத் தகவல்கள் பெறப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |