அச்சமின்றி சிகிச்சை பெறும் சூழலை உருவாக்குங்கள் : பிரதேச மக்கள் கோரிக்கை
கிளிநொச்சி - அக்கராயன் மருத்துவமனையின் வைத்தியரின் பொறுப்பற்ற செயற்பாடு தொடர்பில் பொருத்தமான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்களும், வைத்தியர்களும் வடக்கு மாகாண மற்றும் கிளிநொச்சி மாவட்ட சுகாதார அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி பிரதேச பொது மக்களின் நலன் கருதி விபரீதங்கள் எவையும் இடம்பெற முன்னர் பொருத்தமான நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ளுமாறு பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரின் செயற்பாடுகள் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதேச மக்கள் தங்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும், பெயர் குறிப்பிட விரும்பாத வைத்தியர்கள் தாங்களும் குறித்த விடயம் தொடர்பில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதாகவும், ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.
பொது மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியாத சுகாதார திணைக்களத்தின் ஏனைய பணிகளுக்கு குறித்த வைத்தியரை பயன்படுத்துமாறும்,அத்தோடு அவருக்கு சுகயீனங்கள் இருப்பின் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தாம் பரிந்துரைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த கோரிக்கை தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர்கள்
எவரும் எதுவித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை எனவும், இதனால்
எதிர்காலத்தில் ஏதேனும் விபரீதத்திற்கு இட்டுச் செல்லும் நிலைமையினை
உருவாக்கிவிடுமோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளதாவும் வைத்தியர்கள் கவலை
தெரிவித்துள்ளனர்.



