நீதிமன்ற ஊழியர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது
கொழும்பு கோட்டை நீதிமன்ற ஊழியரொருவர் ஐநூறு ரூபா இலஞ்சம் பெற்ற லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட ஒரு வழக்கின் தீர்ப்பு நகலை வழங்குவதற்காக 500 ரூபா இலஞ்சம் பெற முயன்றபோது, அந்நீதிமன்றத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடு
கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகம், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஒரு நிதித் தகராறு தொடர்பாகத் தாக்கல் செய்த வழக்கை சமரசம் செய்ததைத் தொடர்ந்து, தீர்ப்பு நகலை வழங்குவதற்கு ஈடாக, சந்தேக நபர் ஜூன் 30 ஆம் தேதி இலஞ்சமாக 500 ரூபா தொகையைக் கேட்டுப் பெற்றதாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, விசாரணை அதிகாரிகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று தெரிவித்துள்ளது.