நான் புலிதான் ஆனால் விடுதலைப் புலி அல்ல: சர்ச்சைக்கு மேல் சர்ச்சையை கிளப்பும் அர்ச்சுனா
மேடையில் தாம் ஓரு புலி என குறிப்பிட்டது மிருகத்தையே அன்றி தமிழீழ விடுதலைப் புலிகளை அல்ல என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
‘புலி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியமை மற்றும் புலம்பெயர் மக்கள் தொடர்பான பேச்சு குறித்து எழுந்த சர்ச்சை தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளார்.
தான் 'புலி' என்ற மிருகத்தையே குறிப்பிட்டதாகவும், அது தனக்குப் பிடித்தமான மிருகம் என தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்கள் தங்களை ‘சிங்கம்’ எனக் கூறிக்கொள்வது போல, தான் ‘புலி’ எனக் கூறுவதில் எந்தத் தவறும் இல்லை எனவும், அது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைக் குறிக்கவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
தாம் 'விடுதலைப் புலிகளின் புலம்பெயர் அமைப்பு' என்று கூறவில்லை. வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களையே 'புலம்பெயர்ந்தோர்' எனக் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.
நாட்டின் மறுசீரமைப்பிற்கு அவர்கள் அளித்த நிதியைப் பெற்றுக்கொண்டு அரசாங்கம் எங்களை ஏமாற்றுகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார். தான் ஒரு மருத்துவராக களுபோவில, பேராதனை ஆகிய மருத்துவமனைகளில் பணியாற்றி, சிங்கள நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதம் ஏந்தும் எண்ணம் கொண்டவன் அல்ல என அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கோ அல்லது கைதுக்கோ தான் அஞ்சவில்லை எனக் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தன்னை விசாரிக்க விரும்பினால் ‘வாட்ஸ்அப்’ மூலம் இருப்பிடத்தை அனுப்பினால் போதுமானது எனவும், செருப்பு மற்றும் சாதாரண உடையில் தானாகவே நேரில் வரத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சாதாரண மனிதர்களை இலக்கு வைப்பதை விட்டுவிட்டு, மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் தொடர்புடைய அர்ஜுன மகேந்திரன் போன்ற பெரிய குற்றவாளிகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு மக்களுக்குக் கோரிக்கை விடுத்ததற்காகத் தற்போது வெட்கப்படுவதாக அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.