அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு புதிய வானூர்திகளை கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேகநபருக்கு பிணையாளர்களாக தோன்றிய இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கி அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு திரும்பப்பெறப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (17) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
தாயாரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள்
தனது தாயாரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் காரணமாக தமது கட்சிக்காரர்களால் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி நலின் லட்டுவெஹெட்டி தெரிவித்த வாதங்களை கருத்தில் கொண்ட பின்னர், நீதவான் பிடியாணையை திரும்பப்பெறுமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மறைந்த கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க என்பவருக்கு பிணை நின்ற பிணையாளர்களான அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமையினாலேயே இந்த பிடியாணை நேற்று (16) பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, இன்று (17) நீதிமன்றத்தில் இருவருக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி, அரவிந்த டி சில்வாவின் தாயார் காலமானதாலும், இறுதிச்சடங்கு நேற்று (16) நடைபெற்றதாலும் அவர்களால் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட பிணை
சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட பிணையை பறிமுதல் செய்யாததற்கான காரணங்களை கூறுவதற்காக, சம்பந்தப்பட்ட வழக்கு நேற்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி, சம்பவத்தின் இரண்டாவது சந்தேகநபரான கபில சந்திரசேனவின் மனைவிக்கு, தலா ரூ. 20 மில்லியன் மதிப்புள்ள இரண்டு பிணை பத்திரங்களின் பேரில் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
அதன்படி, அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோரை கைது செய்வதற்காக நேற்று (16) நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திரும்பப்பெறுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.