இலங்கையின் 30 வருட போருக்கு மிக முக்கிய காரணம் என்ன? நாடாளுமன்றில் வெளியிடப்பட்ட தகவல் (Photos)
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தபோது அதிகாரம் பகிரப்படாமையே இலங்கை இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான காரணம் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் மங்கல அமரவீர தொடர்பான அனுதாப பிரேரணை உரையின்போது, பேசிய எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லச்மன் கிரியெல்ல இதனை குறிப்பிட்டார்.
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தபோது சோல்பரி பிரபு இலங்கைக்கு வந்திருந்தபோதும் அவரிடம் அதிகாரம் பரவலாக்கம் தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டது.
இதன்போது அவரும் அதிகார பரவாலாக்கத்துக்கு விருப்பம் கொண்டிருந்தார்.
இதன்படி மூன்று பிராந்தியங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வாய்ப்புக்கள் இருந்தன.
எனினும் அரசியல் சக்திகளின் எதிர்ப்பால் அது மேற்கொள்ளப்படவில்லை.
இதன் காரணமாகவே இலங்கையில் 30 வருடகால போர் இடம்பெற்றது.
இந்தநிலையில், சுதந்திரத்தின்போது அதிகாரப்பரவலாக்கங்களை மேற்கொண்ட இந்தியா உட்பட்ட பல நாடுகள் இன்று அபிவிருத்தியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன என்று லச்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.
இதேவேளை மங்கல சமரவீரவும் அதிகாரப் பரவலாக்கலில் அதிக அக்கறை கொண்டிருந்ததாக கிரியெல்ல தெரிவித்தார்.
இதற்கிடையில், மங்கல சமரவீர, மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வந்த இணை அனுசரணையை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸ் குறிப்பிட்டார்.
எனினும் தமது கொள்கையில் தளராத நிலையை அவர் கொண்டிருந்ததாக பீரிஸ் தெரிவித்தார்.
ஜி எல் பீரிஸூக்கு பின்னர் உரையாற்றிய ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் ஆகியோருக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படியே நகர்வுகளை மேற்கொண்டதாக குறிப்பிட்டார்.