கொரோனா அலைகள் ஓய்வதில்லை
கடல் அலைகள் போல, கொரோனா அலைகளும் ஓயாது என்ற எண்ணத்தை மக்களின் நடவடிக்கைகள் ஏற்படுத்துகின்றது.
இத்தோடு விட்டது. இப்போது முடிந்துவிடும் என்று ஒவ்வொரு முறையும் உலக நாடுகள் பெருமூச்சு விடும் போதெல்லாம் மீண்டும் மூச்சை இழக்க வைக்கும் முயற்சியில் கொரோனா இறங்கிவிடுகின்றது. இதற்கு காரணம் கட்டுப்பாடில்லா மக்களின் நடத்தையே.
எங்கோ நம் கண்ணுக்கு தெரியாத சீனாவில் உருவான வைரஸுக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்றே கொரோனாவை ஒரு காலத்தில் பார்த்தோம். ஆனால் நமக்கு அருகில் வந்து நம் குரல் வலையை நசுக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.
இன்று நாம் சுவாசிக்கும் காற்றோடு காற்றாக கொரோனா கலந்து கிடக்கின்றது. கொரோனா வந்தது. இப்போது முடிந்துவிட்டது என்று நாம் கொஞ்சம் தளர்ந்தால் அடுத்த அலை அதை விட வேகமாக வருகின்றது.
இவ்வாறு கொரோனா அலையின் அச்சம் உலகை வாட்டி எடுக்கின்றது. கொரோனா தீர்ந்து விட்டது என்று நினைத்தாலும் மீண்டும் அது சூறாவளி போல எம்மை தாக்க தயாராகிக்கொண்டிருக்கின்றது.
கொரோனா இரண்டாவது அலை தற்போது குறைந்துள்ளது. எனினும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அடுத்தடுத்து ஏற்படும் உருமாறிய வகை வைரஸ்களால், தடுப்பூசிகள் முழுமையாக பலனளிக்காமல் போகலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், டெல்டா வகை வைரஸுக்கு எதிராக, கொரோனா தடுப்பூசிகள் பெரியளவில் பலனளிக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா முதல் அலையை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனாவால், இரண்டாவது அலையில் ஏராளமான நாடுகள் சிக்கித் தவித்து வருகின்றன.
இது தொடர்பாக பேசிய உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ஒருவர், டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக, தடுப்பூசிகளின் செயற்பாடுகள் மிகவும் திறன்வாய்ந்ததாக அமையவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் அடுத்தடுத்து ஏற்படும் உருமாறிய வகை வைரஸ்களால், தடுப்பூசிகள் முழுமையாக பலனளிக்காமல் போகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
வைரஸ் தொற்றின் அடுத்தடுத்த அலைகள் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 183,401,125பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 167,909,901 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 39 இலட்சத்து 71 ஆயிரத்து 144 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 11,520,080 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 78,708 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. முதலாவது கொரோனா அலை... இரண்டாவது அலை மூன்றாவது அலை என கொரோனா தாக்கம் ஆக்ரோசமான கடல் அலையை போல எம்மை தாக்குகின்றது.
இது எப்போதும் நிற்கும் என்று தெரியாது. ஆனால், அடுத்த அலை வரும் என்பது மட்டும் நிச்சயம். எத்தனையாவது கொரோனா அலை எம்மை தாக்கிக் கொண்டிருக்கின்றது என்பது தெரியாது. ஆனால் ஏதோ ஒரு அலை எம்மை தாக்குகின்றது என்பதே உண்மை.
தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள டெல்டா வைரஸ் ரகம் உலக அளவில் 96 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்நிலையில், இலங்கையில் தற்போது 260,972 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 227,840 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3,120 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 30,055 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தல் பல நாடுகளில் இல்லாமல் போய்விட்டது போலத்தான் நமக்கு தோண்றுகின்றது. ஆனால், தற்போது மிகவும் ஆபத்தான டெல்டா வைரஸ் ரகம் கொரோனா பல நாடுகளிலும் பரவி வருகின்றது.
பிரிட்டனிலும் இந்த கொரோனா தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் அலையைக் காட்டிலும் பிரிட்டனில் மூன்றாவது அலையின் வீரியம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் பிரிட்டன் அரசு கவனமாக கையாள வேண்டும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தடுப்பூசி ஆய்வாளரும் பேராசிரியருமான ஆடம் பின் கூறியதாவது: டெல்டா ரக கொரோனா வைரஸ் தற்போது பிரிட்டனில் பரவத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மிக கவனமாக இருக்கவேண்டும். இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் மூலமாக நாட்டின் பெரும்பான்மையான குடிமக்களின் நலனை காக்க முடியும் என கூறியுள்ளார்.
இதேபோல இந்தியாவுக்கும் அடுத்த அலை தாக்கும் என அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா முதல் அலை பரவல் குறைந்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் இரண்டாவது அலையின் பரவல் அதிகரித்தது.
அதனால், சில மாத இடைவெளியில், மூன்றாவது அலை பரவலாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.2’ வைரஸுக்கு டெல்டா என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது.
தற்போது இரண்டாவது அலை பரவல் கணிசமாக குறையத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அந்தவகையில் மகாராஷ்டிராவில் 21 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார்.
இதேவேலை, இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தாக்கத்தை தவிர்க்க முடியாது. இன்னும் ஆறு முதல் எட்டு வாரங்களில், மூன்றாவது அலை பரவத் தொடங்கும். முதல் இரண்டு அலைகளில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து, நம் மக்கள் பாடம் கற்கவில்லை. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபின், கூட்டமாக கூடி தொற்று பரவலை அதிகரிக்கின்றனர்'' என, எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா முதல் அலை உச்சத்திலிருந்த நேரத்திலேயே, இரண்டாவது அலை வரப்போகிறது என்கிற கருத்துகள் நிபுணர்கள் தரப்பிலிருந்து வந்தன. அதன்படியே, இரண்டாவது அலை வந்துவிட்டது. முதல் அலையைக் காட்டிலும் பல மடங்கு பாதிப்புகளை இரண்டாவது அலை ஏற்படுத்திவிட்டது.
முதல் அலையில் தினமும் புதிதாக ஒரு இலட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டது என்றால், இரண்டாவது அலையில் அது நான்கு இலட்சம் என்ற அளவுக்கு அதிகரித்தது.
இந்த முறை மரணங்களும் பல மடங்கு அதிகம். இப்போது, மூன்றாம் அலை வரப்போகிறது என்கிற எச்சரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன.
இரண்டாவது அலையைக் காட்டிலும் மூன்றாவது அலையில் பாதிப்புகள் மோசமாக இருக்கும் என்கிற கணிப்பும் இருக்கிறது. இலங்கையில் கொரோனா எத்தனையாவது அலையில் நாம் சிக்கியிருக்கின்றோம் என்று எமக்கே தெரியாத நிலையில் உள்ளோம்.
டெல்டா வகை உருமாறிய கொரோனா வைரஸ் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் மக்கள் இது தொடர்பில் எந்தளவு விழிப்புடன் உள்ளனர் என்பது கேள்விக்குறியே. உலகம் முழுவதும் ஊரடங்கு, தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி, செனிடைஸர் போன்றவற்றால் தற்போது கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்துவருகிறது என்று நாம் கூறுகின்றோம்.
ஆனால், கொரோனா எனும் தீப்பொறி அணைந்துவிடவில்லை. ஆங்காங்கே தீப்பொறிகள் இருக்கின்றன. பற்றிக்கொள்வதற்கான சூழல் உருவாகும்போது, மீண்டும் அது தீவிரமாகப் பரவுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, அடுத்த அலை வருகிறதோ இல்லையோ, அதை எதிர்கொள்வதற்கு உரிய முன்னேற்பாடுகளை நாம் செய்ய வேண்டும்.
தற்போது இலங்கையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் தொற்று ஒழிந்துவிட்டது என மக்கள் கருதுகின்றனர். கூட்டமாக கூடத் தொடங்கிவிட்டனர்.
சமூக இடைவெளியை சிறிதும் கடைப்பிடிப்பதில்லை முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிகின்றனர். இதனால் அடுத்த அலை தாக்கத்தையும் தவிர்க்க முடியாத நிலை ஏற்படும். இப்போதே இதன் தாக்கம் தொடங்கியிருக்கவும் வாய்ப்பு உள்ளது.
அடுத்த சில வாரங்களுக்குள் பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. நம் தடுப்பு நடவடிக்கைகளை பொறுத்து இதன் தாக்கம் இருக்கும். வைரஸ் தொடர்ந்து உருமாறுவதால் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். அது நம்மை விடுவதாக தெரியவில்லை. ஆனால் அதனை அழிக்க நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
-வீரகேசரி-