உயர்நீதிமன்ற வெற்றிடம் தொடர்பில் அரசியலமைப்பு சபைக்கும் நிறைவேற்று அதிகாரிக்கும் இடையில் சர்ச்சை
உயர்நீதிமன்றில் உள்ள வெற்றிடமொன்றை நிரப்புவது தொடர்பில் அரசியலமைப்பு சபைக்கும் நிறைவேற்று அதிகாரிக்கும் இடையில் தொடர்ந்தும் சர்ச்சை நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில், நீதியரசர் பிரியந்த ஜயவர்தன ஓய்வு பெறுவதால், உயர் நீதிமன்றில் இரண்டாவது வெற்றிடம் ஒன்று அடுத்த வாரம் ஏற்படவுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 15ஆம் திகதி, நீதியரசர் புவெனக அலுவிஹாரே நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்றார். இதனால் முதலாவது வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
நீதிமன்றில் வெற்றிடங்கள்
இந்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பந்துல கருணாரத்னவை உயர்நீதிமன்றத்திற்கு நியமித்ததை உறுதிப்படுத்துவதற்கு அரசியலமைப்புச் சபை மறுத்ததன் காரணமாக நீதித்துறையில் பல பதவி உயர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நீதியரசர் கருணாரத்னவின் பெயர் உயர் நீதிமன்றத்திற்கு முன்மொழியப்பட்டது.
இதற்கிடையில், நீதியரசர் பிரசன்ன டி அல்விஸ் மற்றும் நீதியரசர் பிரதீப் கீர்த்திசின்ஹா ஆகியோர் ஓய்வு பெற்றதை அடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றிலும் ஏற்கனவே இரண்டு வெற்றிடங்கள் உள்ளன.
பரிந்துரை
அத்துடன் எதிர்வரும் மே மாதம், நீதியரசர் டி.என். சமரகோன் மற்றும் கெஹ்மா ஸ்வர்ணாதிபதி ஆகியோரும் சேவையில் இருந்து ஓய்வு பெற உள்ளனர். இந்தநிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இரண்டு இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், 10 நீதிமன்ற அறைகளில் ஒன்பது மட்டுமே இயங்கி வருகின்றன.
இதனால் வழக்கு விசாரணைகளும்; குறைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, மேல் நீதிமன்ற நீதிபதிகளான கிஹான் குலதுங்க மற்றும் தமித் தோட்டவத்த மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மஹேன் கோபல்லவ ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் உள்ள இரண்டு வெற்றிடங்களை நிரப்புவதற்கு பரிந்துரைக்கப்படவுள்ளனர்.
ஆனால் இதுவரை அரசியலமைப்பு சபையில் இந்தப் பெயர்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. அதேநேரம் மேல் நீதிமன்றங்களிலும் குறைந்தது 10 வெற்றிடங்கள் உள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |